தரம் ஐந்து புலமைப் பரீட்சை இன்று; வினா பத்திரம் குறித்து ஆணையாளர் நாயகம் எச்சரிக்கை

0
286

தரம் ஐந்து புலமைப் பரீட்சை இன்று இடம்பெறவுள்ளது.

மொத்தமாக மூவாயிரத்து 50 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறும். இதில் மூன்று இலட்சத்து 55 ஆயிரத்து 326 பேர் தோற்றுகின்றார்கள். நாடெங்கிலும் 497 ஒருங்கிணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதலாவது வினாத்தாளுக்கு 45 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாளுக்கான பரீட்சை 9.30ற்கு ஆரம்பமாகும். இரண்டாவது வினாத்தாளுக்கான பரீட்சை முற்பகல் 10.45 தொடக்கம் நண்பகல் 12.00 வரை இடம்பெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பரீட்சார்த்தியும் வினாத்தாளின் இடதுபக்க மேல் மூலையில் தமது பரீட்சை சுட்டெண்ணை தெளிவாக எழுத வேண்டும். பென்சிலையோ, நீல நிற அல்லது கறுப்பு நிற பேனாவையோ பயன்படுத்தி விடையளிக்க முடியும். விடையளிக்கையில் உரிய ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியமாகும் என ஆணையாளர் நாயகம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

பெற்றோர் நேர காலத்துடன் பிள்ளைகளை பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பது அவசியமாகும். இடைவேளையின் போது பெற்றோர் பரீட்சை மண்டபத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். பிள்ளைகளுக்கு இலேசாக சமிக்கக்கூடிய உணவையும், தண்ணீர் போத்தலையும் வழங்குமாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பரீட்சை நிறைவடைந்த பின்னர் புலமைப்பரிசில் வினாப்பத்திரம் இரகசிய ஆவணம் என்பதனால் இந்த வினாப்பத்திரத்தை வைத்திருந்தல், பிரதி பண்ணுதல், பிரதி பண்ணப்பட்ட பிரதியை வைத்திருத்தல், விற்பனை செய்தல், அச்சிடுதல், பத்திரிகைகளில் வெளியிடுதல், வார சஞ்சிகைகளில் வெளியிடுதல் ஆகிய தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். சமூக இணையத்தளத்தில் அல்லது வேறெந்த வகையிலும் இதனை பகிரங்கப்படுத்த தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எவரேனும் அல்லது நிறுவனங்கள் இந்த உதரவை மீறும் பட்சத்தில் அது தொடர்பாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது பொலிஸ் தலைமையகத்திற்கு அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்காக பரீட்சைகள் திணைக்களத்துடன் 1901 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் ; தொடர்பு கொள்ள முடியும்.

news.lk

LEAVE A REPLY