எழுபதுகளில் என் தெரு..

0
146

(Mohamed Nizous)

கிறவல் வீதிகள்
கிடுகு வேலிகள்
பரவலாய் நிற்கும்
பச்சை மரங்கள்

வேலியின் முனைகளில்
விரித்துப் பரப்பிய
நீளப் பன்கள்
நெடுகக் காயும்

மாட்டைக் கழற்றி
மல்லாக்க நிமிர்த்திய
கூட்டு வண்டிகள்
ரோட்டில் பாக்கிங்.

அறிவித்தல் சொல்ல
ஆமைக் கார் நுழைய
தெருவே அதிர
திரளும் கூட்டம்

நீளப் படங்கை
நெடுக விரித்து
நெல்லைக் காய்க்கும்
பிள்ளையும் பெண்களும்

சாரன் உடுத்து
சந்தியில் சிறுவர்
சில்லுக்கட்டையில்
மல்லுக்கட்டுவார்

ஓல மட்டக் காரி
ஒன்று சேர்த்த மட்டைகளை
சாலையில் இழுக்க
சத்தம் வரும் மழை போல்.

கையில் தூக்கிய
…….. வாளியுடன்
காலையில் ‘அவர்கள்’
சாலையில் வருவார்

நளவனின் ஓசை
நாலுபுறம் தெறிக்கும்
பழகிய வண்ணான்கள்
பாதை நெடுகிலும்.

பாய் வாங்குவோர்
பாரம் சுமந்து
ஓய்வின்றி அலைவார்
ஊர் பலாய் பேசுவார்

சைக்கிளில் போவோரை
சாலையில் நடப்போர்
ஏக்கமாய்ப் பார்ப்பார்
ஏங்குவார் வாங்க.

கோழிச் சண்டை
கொழுந்து விட்டு எரிய
ஏழு தலை முறையும்
இழுக்கப்படும் வீதியில்

சாரி உடுத்து
சரியாய் மறைத்து
சாரி சாரியாய்
சாலையில் நடப்பார்

காரு ஒன்று
கதவருகில் நின்றால்
யாருக்கு சுகமில்லை
என்று கேட்பார்

கறியைத் தாளிக்கும்
கருவேப்பிலை மணத்தால்
தெருவே மணக்கும்
தின்னத் தூண்டும்

இன்றைய இளைஞர்
எழுபதில் இருந்த
அன்றைய நிலை பற்றி
அறிய எழுதினேன்

LEAVE A REPLY