புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது? பகுதி-3

0
114

(வை.எல்.எஸ். ஹமீட்)

பகுதி-2 இல், விகிதாசாரமே இல்லை! 100% விகிதாசாரமே!! என்ற எதிரெதிர்க் கருத்துக்களை மோதவிட்டு இத்தேர்தல்முறை தொடர்பான சிலதெளிவுகளைக் கண்டோம்.

விகிதாசாரமே இல்லை! என்பது இது விகிதாசாரத் தேர்தலே இல்லை; என்பதன் முற்பதமாகும். விகிதாசாரமே!! என்பது இது கணிக்கப்படுகின்ற முறையின் முன் விளக்கமாகும்.

அதாவது, விகிதாசாரத் தேர்தலை நடத்தாமல், தொகுதிமுறையில் தேர்தலை நடாத்திவிட்டு விகிதாசாரத்தில் கணிப்பிடுகின்ற, வாக்குகளே பெறாத கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதாசாரத்தில் ஆசனங்கள் பங்கிடுகின்ற ஒரு ஜனநாயக விரோத தேர்தல்முறை என்பதைப் பார்த்தோம்.

இதில் முஸ்லிம்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் ?

கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற மொத்த முஸ்லிம்களுக்கும் தொகுதிகள் உருவாக்க முடியாதென்பதால் அத்தொகுதிகளுக்கு வெளியே கணிசமான அளவு முஸ்லிம்கள் வாழ்வார்கள்; எனப் பார்த்தோம். அந்த முஸ்லிம்களுக்கு தொகுதிகளும் இல்லை. அதனால் முதல் 50% இல் அவர்களுக்கு ஆசன இழப்பு. மறுபுறம் அடுத்த 50% இலும் அவர்கள் ஆசனங்களை இழக்கப்போகின்றார்கள்.

இதனை புரிந்துகொள்வதற்கு குருநாகல் மாவட்டத்தை உதாரணத்திற்கு எடுப்போம். அங்கு சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம் வாக்குகள் இருக்கின்றன. ஆனால் அங்கு ஒரு முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகூட உருவாக்க முடியாது. எனவே அந்த மொத்த மாவட்ட முஸ்லிம்களும் தொகுதிகளில் பெறக்கூடிய பிரதிநிதித்துவம் எதனையும்பெற முடியாது. அடுத்த 50% மான பட்டியலில் இருந்து ஆசனமேதும் பெறமுடியுமா எனப்பார்ப்போம்.

தேசியக்கட்சிகள்

ஒவ்வொரு தொகுதியிலும் முஸ்லிம்கள் மிகச்சிறிய விகிதாசாரத்தில் வாழ்வதால் தேசியக்கட்சிகள் எதுவும் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரையும் நிறுத்தாது. பெரும்பான்மை சமூகம் பெரும்பான்மையாக வாழும் ஒரு தொகுதியில் ஒரு முஸ்லிமை வேட்பாளராக நிறுத்தமாட்டார்கள்.

முஸ்லிம்கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தலாம். ஆனால் முஸ்லிம்கள் வாக்களிக்கமாட்டார்கள். (ஒரு சிறிய விதிவிலக்கிருக்கலாம்) காரணம் வெற்றிபெறமுடியாத முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களித்துவிட்டு அத்தொகுதியில் அவர்கள் பலதரப்பட்ட இன்னல்களுக்கு முகம்கொடுக்க முடியாது.

இன்றைய விகிதாசாரத் தேர்லின் கீழேயே, வடகிழக்கிற்கு வெளியே வாழும் முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் தேசியக்கட்சிகளுக்கே வாக்களிக்கிறார்கள். தேசியக்கட்சிகளோ அல்லது அவர்களுடன் இணந்து போட்டியிடுகின்ற முஸ்லிம்கட்சிகளோ முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தினாலும் அவ்வேட்பாளர்கட்கு ஒன்று அல்லது இரண்டு விருப்பத்தெரிவு வாக்குகளை அளித்துவிட்டு மிகுதியை அங்கு போட்டியிடுகின்ற ஒரு பெரும்பான்மை சமூக வேட்பாளருக்கு அளிக்கின்றார்கள். ஏனெனில் பெரும்பான்மை சமூகத்தைப் புறக்கணித்துவிட்டு அங்கு நிம்மதியாக வாழமுடியாது; என நினைக்கின்றார்கள்.

விகிதாசாரத்தேர்தலில் மொத்த மாவட்டமும் ஒரு தொகுதியாகும். எனவே, அங்கு போட்டியிடுகின்ற பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் முஸ்லிம் வாக்குகளில் அதீத கவனம் செலுத்தமாட்டார்கள். ஆனால் தொகுதிமுறைத் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் தமது தொகுதியில் ஒரு வாழ்வா- சாவா என்ற போராட்டத்தை நடாத்திக்கொண்டிருப்பார். அந்நிலையில் முஸ்லிம் வாக்குகள் மீது அதீத அக்கறை செலுத்துவார்.

அந்த சூழ்நிலையில் அந்த வேட்பாளர்களைப் பகைத்துக்கொண்டு வெற்றிபெறமுடியாத முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களிக்க முஸ்லிம்கள் விரும்பமாட்டார்கள். இந்நிலையில் தேசியக்கட்சியிலும் ஒரு முஸ்லிம் போட்டியிடமாட்டார். முஸ்லிம்கட்சியும் வாக்குப்பெறமாட்டாது. இந்நிலையில் குருநாகல் மாவட்டத்தில் ஆசனம்பெறக்கூடிய ஒரேயொரு வழி தேசியக்கட்சிகளின் ‘பட்டியலிலிருந்து’ மாத்திரம்தான்.

உத்தரபிரதேச உதாரணம்

எனது “ ஜனாதிபதி பதிவி ஒழிப்பு- பாகம்-5 இல் குறிப்பிட்டதை இங்கு சுருக்கமாக குறிப்பிடவிரும்புகின்றேன்.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் 19.26% வாழ்கிறார்கள். அங்குபல முஸ்லிம்பெரும்பான்மை சட்டசபைத் தொகுதிகள் இருக்கின்றன. இருந்தாலும் 2017ம் ஆண்டு நடைபெற்ற 403 ஆசனங்களைக்கொண்ட சட்டசபைக்கான தேர்தலில் ஒரு முஸ்லிம்கூட தெரிவுசெய்யப்படவில்லை. காரணம் பாரதீய ஜனதாக் கட்சி அத்தேர்தலில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் முஸ்லிம்கள் யாரையும் வேட்பாளராக நிறுத்தவில்லை. ஏனைய கட்சிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டார்கள்.

முஸ்லிம்கள் வெற்றிபெற்றாலும் எதிர்கட்சியில்தான் அமர்வார்கள். அதன்பின் ஆட்சிக்கு வரும் பாரதீய ஜனதா முஸ்லிம்களைப் பழிவாங்கும்; என அஞ்சி முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகளிலேயே முஸ்லிம்வேட்பாளர்களைப் புறக்கணித்து பாரதீய ஜனதாவின் வேட்பாளர்கட்கு வாக்களித்திருக்கின்றார்கள்; என்றால் தொகுதிமுறைத் தேர்தலில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களின் நிலையை யோசித்துப்பாருங்கள். இலங்கையும் கிட்டத்தட்ட இந்தியாவின் நிலைக்குத்தான் வந்துகொண்டிருக்கின்றது.

பட்டியல் நியமனம்

பட்டியல் நியமனம் என்பது அந்தக்கட்சிகளின் விருப்பத்தோடு சம்பந்தப்பட்டது. சட்டரீதியான கட்டாயம் எதுவும் இல்லை. இலங்கையில் தொடர்ந்தும் தெற்கில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் ஐ தே கட்சிக்கே வாக்களிக்கிறார்கள். கடந்தகாலங்களில் அஸ்வர் ஹாஜியார் சில சமயங்களில் தேசியப்பட்டியலில் நியமிக்கப்பட்டிருக்கின்றார். வேறுயாரும் இல்லை. முஸ்லிம்கட்சிகளுடன் இணைந்துபோட்டியிடுவதால் அக்கட்சிகளுக்கு வழங்கும் ஆசனம் வேறாகப்பார்க்கப்பட வேண்டும்.

இந்நிலையில் புதிய மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம்கள் தேசியக்கட்சிகளின் பட்டியலில் நியமிக்கப்படுவதென்பது அக்கட்சிகளின் புண்ணியத்தில் தங்கியுள்ளது. எங்காவது ஒன்றிரண்டு நியமிக்கப்படலாம். எங்களது விகிதாசாரத்திற்கேற்ப பெறமுடியாது.

இங்கு எழக்கூடிய இன்னுமொரு பிரச்சினை 25% பெண்கள் நியமிக்கவேண்டி இருப்பதால் சில மாவட்டங்களில் எந்த தேசியக்கட்சிக்கு நாம் அதிகமாக வாக்களித்துவிட்டு பட்டியல் நியமனத்திற்கு ஏங்கிக்கொண்டிருப்போமோ அந்தக்கட்சி ஆண்களை நியமிக்க முடியாத சூழல் ஏற்படலாம். எனவே நாம் எமது அடிப்படை உரிமையான வாக்கை அளித்துவிட்டு பட்டியல் நியமனத்திற்காக பிச்சைப்பாத்திரம் ஏந்தவேண்டிய நிலைவரும்.

அதேநேரம் பிரதான தேசியக்கட்சிகளைப் பொறுத்தவரை தொகுதிகளில் அதிகமாக வெற்றிபெறுகின்ற கட்சிக்கு பட்டியல் ஆசனம் குறைவாகவும் தொகுதிகளில் தோல்வியடைகின்ற கட்சிக்கு பட்டியல் ஆசனம் கூடுதலாகவும் கிடைக்கும். இதனை உள்ளூராட்சித் தேர்தலில் நிதர்சனமாகக் கண்டோம். அவ்வாறு தொகுதிகளில் வெற்றிபெறுகின்ற கட்சிகளுக்கு பட்டியலில் கிடைக்கின்ற ஒரு சில ஆசனங்களும் பெரும்பாலும் பெண்களுக்குப் போவதற்கான வாய்ப்பே அதிகம் என்பதையும் உள்ளூராட்சித் தேர்தலில் கண்டோம். இத்தனையும் தாண்டி ஏதாவது மிஞ்சினாலும் “ அறுந்து விழுந்த மாங்காய்க்கு அறுபதுபேர் காவல் என்பதுபோல் அவர்களுக்குள் ஆயிரம் குத்துவெட்டுக்கள் இருக்கும். இவ்வளவையும் தாண்டித்தான் முஸ்லிம்களுக்கான பட்டியல் நியமனத்திற்காக அவர்கள் முகம் பார்க்க வேண்டும்.

இந்நிலையில், தொகுதிகளில் அதிகமாக தோல்வியடையப்போகின்ற தேசியக்கட்சி எது என்று தேடிப்போய் முஸ்லிம்கள் வாக்களித்தால் சிலவேளை ஒன்றிரண்டு பட்டியல் ஆசனங்கள் அதிகமாக பெறலாம். தொகுதியில் வெற்றிபெறக்கூடியவரை பகைத்துக்கொள்ளக்கூடாது; என்பதுதான் ஒரு முஸ்லிம் வேட்பாளரையே புறக்கணித்து ஒரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கான காரணியாக இருக்கும். அந்நிலையில் பட்டியலில் ஏதாவது பிச்சை கிடைக்கலாம்; என்பதற்காக தொகுதியில் பெரும்பானமை மக்களின் ஆதரவைப்பெற்ற வேட்பாளரைப் புறக்கணித்து ஒரு தேசியக்கட்சியின் தோல்வியடைப்போகின்ற வேட்பாளருக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பார்களா?

தேர்தல் கூட்டணி

புதிய தேர்தல் முறையின்கீழ் தேசியக்கட்சிகள் முஸ்லிம்கட்சிகளுடன் தேர்தல்கூட்டணியை பெரிதாக நாடாது. முஸ்லிம்கட்சிகளை இணைத்து முஸ்லிம்வாக்குகளைக் கவரவேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. ஏனெனில் முஸ்லிம்கட்சிகளுடன் இணைந்தாலும் இணையாவிட்டாலும் முஸ்லிம்கள் தமக்குத்தான் வாக்களிப்பார்கள்; என்று அவர்களுக்குத் தெரியும்.

இதேபோன்று பல மாவட்டங்களில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கப்போகின்றார்கள். எனவே, தேசியக்கட்சிகளிலின் பட்டியலில் இருந்தும் முஸ்லிம்களுக்கு குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவம் கிழக்கிற்கு வெளியே கிடைக்கப்போவதில்லை; முஸ்லிம் கட்சிகளிலிருந்தும் கிடைக்கப்போவதில்லை.
முஸ்லிம்களுக்கு இப்புதிய முறையின்கீழ் சுமார் 25 அளவில் ஆசன இழப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இவற்றில் எத்தனையை தேசியக்கட்சிகள் புண்ணியத்தில் ஈடு செய்யும்?

இது முழுக்க முழுக்க சிறுபான்மைகளை ஓரம்கட்டுகின்ற தேர்தலாகும். எனவே, முஸ்லிம்கள் கட்சிவேறுபாடுகளுக்கப்பால் ஒட்டுமொத்தமாக இத்தேர்தல் முறையை எதிர்த்தாக வேண்டும். மாற்றுத்தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.

இதில் மிகவும் துரதிஷ்டம் என்னவென்றால் கிழக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிம்களைத்தான் இத்தேர்தல்முறை அதிகமாக பாதிக்கப்போகின்றது. ஆனால் அவர்கள்தான் இதனை அதிகம் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள்.

(தொடரும்)

LEAVE A REPLY