கல்முனை முதல்வர் றகீப் அவர்களுடன் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் சந்திப்பு; சமகால அரசியல், சமூக, பொருளாதார விடயங்கள் குறித்து கலந்துரையாடல்..!

0
84

(அஸ்லம் எஸ்.மௌலானா)

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ப்ரைஸ் ஹட்சஸன் இன்று புதன்கிழமை (18) கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்து, மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது அம்பாறை மாவட்டத்தின் சமகால அரசியல், சமூக, கலாசார, பொருளாதார விடயங்கள், யுத்தத்திற்கு பின்னர் இனங்களிடையான புரிந்துணர்வு, நல்லிணக்கம் தொடர்பிலும் இனங்களிடையே காணப்படுகின்ற காணிப் பிணக்குகள், குடியிருப்பு பிரச்சினைகள் தொடர்பிலும் அம்பாறை நகர பள்ளிவாசல் சிங்கள கடும்போக்குவாதிகளினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் சிங்கள- முஸ்லிம் இன முரண்பாடுகள் குறித்தும் முதல்வர் றகீப்பிடம் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் விபரமாக கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் கல்முனை மாநகர சபையில் இனங்களினதும் கட்சிகளினதும் பிரதிநிதித்துவம், அந்த சபையினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள், எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார். இதன்போது திண்மக் கழிவகற்றல் சேவையை முன்னெடுப்பதில் மாநகர சபை எதிர்நோக்கும் சவால்கள், அதனை மேம்படுத்துவதற்கு தேவையான வளங்கள், தீயணைப்பு படைப் பிரிவை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைத்த முதல்வர் றகீப், இவற்றை மேம்படுத்துவதற்கு அவுஸ்திரேலியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.

இதன்போது, தாம் இவ்விடயத்தில் அதிக கரிசணை கொள்வதாக தெரிவித்த உயர்ஸ்தானிகர், தமது நீண்ட கால வேலைத் திட்டத்தில் இக்கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகளும் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரொஷான் அக்தர், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், பொறியியலாளர் ரி.சர்வானந்தன், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

20180718_090511

LEAVE A REPLY