குழந்தைக்கு மதுபானம் வழங்கிய தந்தை உட்பட நால்வர் கைது!

0
104

குழந்தைக்கு மதுபானம் அருந்தக் கொடுத்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த குழந்தையின் தந்தை (40) உள்ளிட்ட மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு சில தினங்களுக்கு முதல், குழந்தை ஒன்றுக்கு மதுபான போத்தல் மூலம் மதுபானத்தை அருந்தக் கொடுப்பதாக தெரிவிக்கப்படும் வீடியோ காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இந்நால்வரும் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

1995 ஆம் ஆண்டு, 22 ஆம் பிரிவின் திருத்தப்பட்ட தண்டனைக் கோவை சட்டத்தின் 308 அ. பிரிவுக்கமைய, குழந்தை கொடுமைப்படுத்தல் குற்றச்சாட்டுக்கு அமைய குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 14 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குறித்த குற்றச்சாட்டுக்கு அமைய, பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்மைய மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, இச்சம்பவம் அநுராதபுரம், கணங்கமுவ, மீகலேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதற்கமைய, மதுபானம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குறித்த, ஒரு வயதும் ஒரு மாதமும் நிறைந்த குழந்தையை அநுராதபுரம் நீதிமன்ற வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகலேவ பொலிசாரினால் மேற்கொண்டுள்ளனர்.

(தினகரன்)

LEAVE A REPLY