காத்தான்குடி ம.ம.வி.தேசியப் பாடசாலை பழைய மாணவர் இரவு நேர சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்துமா?

0
352

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் KKCian PPA DINNER TALK எனும் தொனிப் பொருளில் கடந்த 14ம் திகதி காத்தான்குடி பீச் வே ஹோட்டலில் பழைய மாணவர்களின் இரவு நேர ஒன்று கூடல் சாப்பாடு என்பன இடம் பெற்றன.

பல எதிர் பார்ப்புக்களுடன் பழைய மாணவர்கள் பலரும் அங்கு வருகை தந்திருந்தனர்.

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையின் வளர்ச்சியிலும் அதன் உயர்ச்சியிலும் ஆர்வமாக உள்ள பலரும் அங்கு சமூகமளித்திருந்தனர்.

பாடசாலையின் அதிபரின் உரை, அஷ்ஷெய்க் அஸ்பர் ஹசன் மௌலவியின் விஷேட உரை, பழைய மாணவர் சங்கம் செய்த வேலைத்திட்டங்கள் பற்றிய ஒரு உரை இவைகளுடன் சாப்பாடும் வழங்கப்பட்டு முடிந்தது.

எதிர் வரும் 21ம் திகதி பாடசாலையில் நடைபெறவுள்ள பழைய மாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டத்திற்கு கட்டாயமாக வாருங்கள் என்ற அழைப்புடன் இரவு நேர பேச்சு வார்த்தை சந்திப்பு இனிதே நிறைவு பெற்றது.

இங்கு மீண்டும் மீண்டும் அழுத்திக் கூறப்பட்ட விடயம் 21ம் திகதி பாடசாலையில் நடைபெறவுள்ள பழைய மாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டத்திற்கு கட்டாயமாக வந்து விடுங்கள் என்பதாயே ஆகும்.

பாடசாலையின் எதிர் கால முன்னேற்றத்திற்கு அங்கு ஒன்று திரண்ட பழைய மாணவர்கள் என்ன செய்ய வேண்டும், பாடசாலையை முன்னேற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன? இதற்காக யாருடைய ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் பெற வேண்டும். இவ்வாறான விடயங்கள் பற்றிய ஒரு கருத்துப் பகிர்வு இங்கு இடம் பெற்றதாக தெரிய வில்லை.

காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலயம் நடாத்திய நடை பவணிக்கு பதிலடி கொடுப்பது போன்று இந்த இரவு ஒன்று கூடல் ஒழுங்கு படுத்தப்பட்டதா என சிலரும் அவ்விடத்தில் தமக்குள் அளவளாவிக்கொண்டதையும் காண முடிந்தது.

இது ஒரு பிரயோசனமில்லாத ஒன்று கூடல் இந்த இரவு ஒன்று கூடலின் மூலம் சொன்ன செய்தி என்ன என ஒரு சாரார் தமக்குள் பேசிக் கொண்டனர்.

அங்கு சிறப்புரை நிகழ்த்திய மௌலவி அஸ்பர் ஹசன் பலாஹியின் விஷேட உரை சிறப்பாக இருந்தது.

அவரின் உரை யதார்த்தமானது என்று இன்னும் சிலர் பேசிக் கொண்டதையும் அவதானிக்க கிடைத்தது.

இன்னும் சிலர் நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரே வகுப்பில் படித்தவர்களை சந்தித்ததால் அவர்களுடன் இரண்டறக் கலந்து கருத்துப்பறிமாறிக் கொண்டிருந்ததையும் காணமுடிந்தது.

இன்னும் சிலர் தமது கையடக்க தொலைபேசியில் செல்பி பொட்டோக்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.

இவ்வாறு ஒரு மாதிரியாக சந்திப்பும் சாப்பாடும் முடிந்து விட்டது. இந்த இரவு நேர சந்திப்பும் சாப்பாடும் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையின் முன்னேற்றத்திற்கு ஏற்படுத்தப் போகும் மாற்றம் தான் என்ன? கல்வியிலும் புறக்கிர்த்திய செயற்பாடுகளிலும் ஏற்படுத்தப் போகும் சாதனைகள் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இப் பாடசாலைக்கு வெளியூரிலிருந்து ஒரு துறை சார்ந்த ஆசிரியர் வருகை தந்து கல்வி கற்றுக் கொடுக்கின்றார்.

அவர் என்னிடம் கூறிய கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் காத்தான்குடி மத்திய கல்லூரிக்கு ஒரு பெரிய எதிர் பார்ப்புடன் இடமாற்றம் பெற்று வந்தேன்.

இங்கு வந்த போது இப்பாடசாலை பெரிய நிலப்பரப்பில் உள்ளது. பௌதீக வளத்துடன் உள்ளது. உலமாக்கள் மார்க்க அறிஞர்கள் நிறைந்த ஊரில் இப்பாடசாலை உள்ளது.

பலமான அரசியல் தலைவர் உட்பட இன்னும் சில பெறுமதியான அரசியல் வாதிகள் உள்ள ஊரில் இந்த பாடசாலை உள்ளது.

கல்வியலாளர்களும் வர்த்தக பெருமக்களும் நிறைந்த ஊரில் இந்தப் பாடசாலை உள்ளது.

ஆனால் இவ்வளவு வளமும் இருக்கும் இப்பாடசாலையின் நிலையைப் பார்த்து கவலையடைந்தவனாக மிக விரைவாக இப்பாடசாலையை விட்டும் வேறு ஒரு பாடசாலைக்கு இடமாறிப் போய் விடலாம் என யோசித்தாலும் சில மாணவர்களின் நிலையை கருத்திற் கொண்டு எனது இடமாற்றம் என்ற முயற்சியை தடுக்கின்றது என அந்த துறை சார்ந்த ஆசிரியர் கூறினார்.

இன்னும் ஒரு கல்வியலாளர் என்னிடம் கூறுகையில் தேசிய ரீதியாக மாகாண ரீதியாக மாவட்ட ரீதியாக பலரும் இப்பாடசாலைக்கு வந்து ஒரு காலத்தில் கல்வி கற்றனர்.

பின்னர் பிரதேசத்துக்கான பாடசாலையாக இப் பாடசாலை திகழ்ந்தது. தற்போது இப் பாடசாலை ஒரு கிராமத்துக்கான பாடசாலையாக சுருங்கியுள்ளதோ என எனக்கு எண்ணத்தோனுகின்றது எனக் கூறிக் கொண்டார்.

இந்த நிலையில் எதிர் வரும் 21ம் திகதி பழைய மாணவர் சங்கத்தின் பொதுச் சபைக் கூட்டம் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி

LEAVE A REPLY