மரண தண்டனைதான் ஒரே வழி; ஜனாதிபதியின் தீர்மானம் சரியானதே

0
99

(பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு)

“இலங்கையில் போதைப் பொருள் பாவனை மற்றும் வர்த்தகத்தை முற்றாக ஒழிக்கும் நோக்கில் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். மரண தண்டனையே போதைப் பொருளின் கோரப் பிடியில் இருந்து இந்த நாட்டைக் காப்பாற்றும்.

இந்தத் தீர்மானம் அரசியல் நோக்கம் கொண்டதாக இல்லாமல் நாட்டின் எதிர்காலம் மீது அக்கறைகொண்டதாக இருக்க வேண்டும். இதன் மூலம் போதைப் பொருள் வர்த்தகமும் பாவனையும் முற்றாக ஒழிந்து நாடு நிச்சயம் வளம் பெறும்”

-இவ்வாறு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு,

இந்த நாட்டின் உண்மையான பிரஜை என்ற வகையிலும், சுகாதாரப் பிரதி அமைச்சர் என்ற வகையிலும் போதைப் பொருள் பாவனையற்ற – நல்லொழுக்ககொண்ட மனிதர்களைக் கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், அந்த விருப்பம் நிறைவேறுவதாக இல்லை. இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகம் கொடி கட்டிப் பறப்பதை தினமும் வெளியாகும் செய்திகள் மூலம் அறிய முடிகின்றது.

இதனால் ஒரு சிலரின் பண ஆசைக்காக முழு நாடுமே சீரழிகிறது. இதன் பாவனையால் பாடசாலை மாணவர்கள் சீரழிகின்றனர். குடும்பங்கள் சீரழிகின்றன. கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்புகள் இடம்பெறுகின்றன.

போதைப் பொருள் பாவனையால் நிகழ்கின்ற அத்தனை குற்றங்களையும் நிறுத்த வேண்டுமென்றால் போதைப் பொருள் வர்த்தகத்துக்கு உறுதியான முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

தினமும் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான போதைப் பொருட்களும் சிக்குகின்றன; போதைப் பொருள் வர்த்தகர்களும் கைது செய்யப்படுகின்றனர். இருந்தாலும், இதன் பாவனையும் வர்த்தகமும் குறைந்ததாகத் தெரியவில்லை. இதைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவரை உறுதியான நடவடிக்கை எடுக்காமையே இந்த நிலைமைக்கு காரணம்.

கைது செய்யப்படுகின்ற போதைப் பொருள் வர்த்தகர்கள்கூட சிறையில் இருந்துகொண்டு வர்த்தகத்தைத் தொடரும் அளவுக்கு நிலைமை மிக மோசமாக மாறியுள்ளது. நிலைமை இப்படி இருக்கும்போது எப்படி போதைப் பொருள் வர்த்தகத்தை ஒழிப்பது?

உண்மையில், இதை முற்றாக ஒழிக்க வேண்டுமென்றால் மரண தண்டனைதான் ஒரே வழி. இதைவிட வேறு மார்க்கம் இல்லை. இதை ஜனாதிபதி தாமதித்தாவது விளங்கி இருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.

இனி இந்த போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கும் ஏற்கனவே ஈடுபட்டு சிறையில் இருப்பவர்களுக்கும் மரண தண்டனை வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருப்பது பாராட்ட்டுக்குரியது.

இந்தத் தீர்மானம் உண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடு வளம் பெறும்.எமது இளைய சந்ததியினர் பேரழிவில் இருந்து தப்பித்துக்கொள்வார்கள். இந்தத் தீர்மானம் அரசியல் நோக்கம் கொண்டதாக இல்லாமல் நாட்டின் நலன்மீது அக்கறை கொண்டதாக இருக்க வேண்டும். எமது ஆதரவு ஜனாதிபதிக்கு நிச்சயம் உண்டு. இந்தத் தீர்மானத்தை அவர் கூடிய விரைவில் நிறைவேற்ற வேண்டும். -எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY