அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் வாழ்வாதாரம் என்னும் பிச்சை பாத்திரத்துக்கு அடிமைப்பட்டவர்களா?

0
120

(முகம்மத் இக்பால், சாய்ந்தமருது)

அமைச்சர் றிசாத் அவர்களின் அம்பாறை மாவட்ட விஜயத்தினை முன்னிட்டு பாரியளவில் ஊடக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஊடகங்கள் அமைச்சரின் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதே இதற்கு காரணமாகும்.

நல்லாட்சி அரசாங்கத்தில் நாடு தழுவிய ரீதியில் பரவலாக பாரிய அபிவிருத்தி பணிகள் மு.கா தலைவரினால் மேற்கொள்ளப் படுகின்றபோதிலும் இந்த ஊடகங்கள் அதனை இருட்டடிப்பு செய்வதுடன், குறை காண்பதிலேயே முழு கவனத்தினையும் செலுத்துகிறது.

அமைச்சர் றிசாத்தின் வருகையானது அபிவிருத்தி பணிகளுக்கானதல்ல. மாறாக அரசியல் நோக்கங்களுக்கானது. அதாவது அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசை அழித்து தனது கட்சியை அங்கு காலூன்ற செய்ய வேண்டும் என்பதற்காக மக்களை கவரும்பொருட்டு பாரிய விளம்பரங்களுடன் வாழ்வாதார உதவி என்ற போர்வையில் பிச்சை வழங்குவதாகும்.

அமைச்சர் பிரதிநிதித்துவம் செய்கின்ற வன்னி மாவட்ட மக்கள் இன்னமும் அகதி அந்தஸ்திலிருந்து விடுபடாமலும், உட்கட்டமைப்பு வசதிகள் அற்ற அடிமட்ட வாழ்க்கையினை வாழ்ந்துகொண்டு வருகின்றார்கள்.

ஆனால் அம்பாறை மாவட்ட மக்களின் தேவைகளும், பிரச்சினைகளும் முற்றிலும் வேறுபட்டதாகும். அதாவது அகதிகளாகவோ, அடிமட்ட வாழ்க்கையோ வாழவில்லை. வன்னி மாவட்ட மக்களுடன் ஒப்பிடுகையில் கல்வியிலும், பொருளாதாரத்திலும் உயர்ந்த நிலையிலே உள்ளார்கள்.

உண்மையில் அம்பாறை மக்களுக்கு இதயசுத்தியுடன் வாழ்வாதாரம் வழங்குவதென்றால் அதற்காக இந்தளவுக்கு விளம்பரம் செய்யவேண்டிய அவசியமில்லை.

வன்னி மாவட்ட மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காணாமல் ஊடக பலத்தின் மூலம் அம்மக்களை ஏமாற்றுவது போன்று அம்பாறை மாவட்ட மக்களையும் ஏமாற்றலாம் என்பது பகல் கனவாகும்.

எனவேதான் தங்களது அரசியலை அம்பாறை மாவட்டத்தில் காலூன்ற செய்யும் பொருட்டு பாரிய விளம்பரம் செய்யப்பட்டு அபிவிருத்தி மழை என்ற போர்வையில் மக்களை வரிசையில் நிறுத்தி அவர்களை கையேந்தவைத்து அதனை படம் பிடித்து ஊடகங்கள் மூலமாக பாரிய விளம்பரம் தேடும் நடவடிக்கைதான் அமைச்சரின் அம்பாறை மாவட்ட விஜயமாகும்.

முஸ்லிம் காங்கிரசின் கோட்டையான அம்பாறை மாவட்டத்தில் அவர்களினால் செய்ய முடியாத வேலைகளை செய்து காட்டிவிட்டு அதன் பின்பு தங்களை அங்கு காலூன்ற செய்ய முற்பட்டால் ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அபிவிருத்தி மழை என்ற போலியான ஊடக விளம்பரத்தினை மட்டும் செய்துகொண்டு பிச்சை பாத்திரம் வழங்கி மக்களை ஏமாற்றும் இந்த நடவடிக்கையானது போலி விளம்பர ஏமாற்று வித்தையும், ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்.

LEAVE A REPLY