நிதி ஒதுக்கீட்டில் அம்பாறை மாவட்ட தமிழ் , முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிப்பு

0
172

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் குற்றச்சாட்டு

(எம்.ஜே.எம்.சஜீத்)

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் 2018ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படும் விசேட முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதி அபிவிருத்தி திட்டத்தில் அம்பாரை மாவட்ட தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் பெயருக்கே கலங்கம் ஏற்பட்டுள்ளது என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் தயாகமகே, இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயானி விஜேவிக்ரம, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோரின் இணைத்தலைமையில் (25) அம்பாரை கச்சேரியில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் 2018ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படும் விசேட முன்னுரிமை திட்டத்தின் கீழ் திருமலை , மட்டு நகர், அம்பாரை மாவட்டங்களை விசேட திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு பண ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்பாரை மாவட்டத்தில் 100முஆ வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு 2480மில்லியன் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மதிப்பீட்டு அறிக்கை என்பன அம்பாரை மாவட்ட செயலகத்தினால் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் போரினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இம் முன்மொழிவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்துரையாடி முடிவெடுக்கப்படாமல் ஒரு தலைபட்சமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதனால் மூவின மக்களும் வாழும் அம்பாரை மாவட்டத்தில் சமத்துவம் பேணப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தவறான நடவடிக்கையின் காரணமாக சமூகங்களுக்கிடையில் விரிசல்கள் ஏற்படக் கூடிய நிலைமை ஏற்படுகிறது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்காமல் ஒரு தலைபட்சமாக அனுப்பப்பட்ட வீதி அபிவிருத்தி திட்டங்களை மீளாய்வு செய்வதோடு போரினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும் நீண்ட காலமாக பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள வீதிகளை இணைத்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூவின மக்கள் வாழும் அம்பாரை மாவட்டத்தில் அபிவிருத்ததிப் பணிகள் மேற்கொள்ளப்படும் போது சமூகங்களுக்கிடையில் சமத்துவம் பேனப்படாமல் இனவாத அரச உயர் அதிகாரிகள் இணைந்து இரகசியமான முறையில் இச்செயற்பாடுகளை முன்னெடுப்பதனால் அம்பாரை மாவட்டத்தில் இனவாத செயற்பாடுகள் வளர்ந்து வருகின்றது. புதிய அரசில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லினக்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தமிழ் முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கனிக்கப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கதாகும்.

அம்பாரை மாவட்ட உயர் அரச அதிகாரிகள் இம்மாவட்டத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் சமூகங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்டதால் மாவட்டத்தில் அமைதியாக வாழ்ந்து வந்த சமூகங்களுக்கு மத்தியில் பாரிய இன முறுகல் ஏற்படக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது. நீண்ட காலமாக அம்பாரை சிங்கள மக்கள் மத்தியில் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களுக்கு எதிரான இன வன்முறைகள் செயல்படுத்தப்பட்டதனால் அம்பாரையில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் ஜூம்ஆ பள்ளிவாசல் கடைகள் சொத்துக்களுக்கு கோடிக்கணக்கான சேதங்கள் ஏற்பட்டது.

இச்செயற்பாடுகளை மேற்கொண்ட இனவாதிகள் சிலர் சந்தோசப்பட்டாலும் நமது அம்பாரை மாவட்டத்தின் பெயருக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. அம்பாரை மாவட்டத்தில் இனவாத செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு நஷ்ட ஈட்டினை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியும் இதுவரை மந்த கதியில் இச்செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இவ்வாறான விடயங்களுக்கு முக்கியத்துவமளித்து பாதிக்கப்பட்ட பள்ளிவாசல் உடன் புனரமைக்கப்படுவதற்கும், பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY