புல்லுமலை குடி நீர் போத்தல் தொழிற்சாலை விவகாரம் தொடர்பில் த.தே.கூ. MPகளுக்கும் தவிசாளர் அஸ்பருக்குமிடையில் சூடான வாதம்

0
597

(விஷேட நிருபர்)

குடி நீர் போத்தல் தொழிற்சாலை விவகாரத்தை இன ரீதியாக பார்க்க வேண்டாம் என காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

(25.6.2018) திங்கட்கிழமை நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே அஸ்பர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்ப மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவர்களான பிரதியமைச்சர்கள் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அலிசாஹீர் மௌலானா மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீநேசன் ஆகியோரின் தலைமையில் கூட்டம் நடைபெற்ற போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோஸே;வரனினால் மட்டக்களப்பு புல்லுமலையில் அமைக்கப்பட்டு வரும் குடி நீர் போத்தல் தொழிற்சாலை அப்பிரதேச மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமெனவும் நிலத்தடி நீர் உறுஞ்சி எடுக்கப்படுமெனவும் இதனால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்து அந்த தொழிற்சாலையை தடுத்து நிறுத்துமாறு பிரேரணையொன்றை முன் வைத்தார்.

இதன் போது காத்தான்குடி நகர சபை தலைவர் அஸ்பர் கருத்து தெரிவித்தார்.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் அப்பிரதேச மக்களுக்கு குடி நீர் இல்லையென அடையாளப்படுத்தப்பட்டு அப்பிரதேச மக்களுக்கு குடி நீருக்கான குழாய்க்கிணறை அடித்து குடி நீரை அப்பிரதேச மக்களுக்கு இலவசமாக வழங்கி வந்தோம்
.
இதற்கென மாதமொன்றுக்கு 45000 ரூபா மின்சார கட்டணம் வரும் நாம் மேற் கொண்ட இந்த நடவடிக்கை அந்த பகுதி பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை ஆகியோருக்கு நன்கு தெரியும்.

இந்தப்பிரதேசத்தின் தண்ணீர் நல்ல தண்ணீர் குடிப்பதற்கு உகந்த தண்ணீர் என அறிந்ததன் பின்னர் குடி நீர் போத்தல் தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரினோம்.

அதற்காக சகல தரப்பினரும் ஆராய்ந்து அனுமதியை தந்துள்ளனர். இந்த அனுமதியை பெறுவதற்கு இரண்டு வருடங்கள் சென்றன. முறையான அனுமதியை நாம் பெற்றுள்ளோம்.

அப்பிரதேசத்தின் பிரதேச செயலாளருக்கும் நாம் சகல விபரங்களையும் கையளித்துள்ளோம்.

இலங்கையில் 150க்கு மேற்பட்ட குடி நீர் போத்தல் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகள் எல்லாமே பூமியிலிருந்து தண்ணீரை பெறுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு தொழிற்சாலை அமையப் பெறுவதென்பது பெருமையான விடயமாகும்.

எமது மாவட்டத்தினை சேர்ந்த பலருக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கும் அதே போன்று வேறு மாவட்டங்களில் இருந்து போத்தல் தண்ணீரை பெறுவதை விட நமது மாவட்டத்திலிருந்தே போத்தல் தண்ணீரை பெற்றுக் கொள்ள முடியும்.

இதற்காக ஒரு குழுவொன்றினை அமைத்து முறையாக அனுமதியை நாங்கள் பெற்றுள்ளோமா என்பதை ஆராய்ந்து அதற்கான தீர்மானத்தை எடுங்கள் இதனை இன ரீதியாக பார்க்க வேண்டாம். இது தொடர்பாக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது இன ரீதியாக எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

இந்த தொழிற்சாலையை இன ரீதியாக பார்க்காமல் மாவட்ட அபிவிருத்தியாக பாருங்கள் என தெரிவித்தார்.

இதையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் இந்த தண்ணீர் போத்தல் தொழிற்சாலை அமையக் கூடாது என்றும் அதன் நிர்மாணப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் கூட்டத்தில் வேண்டுகோள் விட்டனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக இந்த விடயத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நான்கு பேர் அடங்கிய துறை சார் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை அமைப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இந்தக்குழுவுக்கான துறை சார்ந்த அதிகாரிகளின் பெயர்களும் இதன் போது முன் மொழியப்பட்டன.

இந்தக் குழு இந்த குடி நீர் போத்தல் தொழிற்சாலை தொடர்பில் ஆராய்ந்து மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

36318995_2165193757032503_6301494970658324480_n 36273292_2165193590365853_4077887442563104768_n

LEAVE A REPLY