கிழக்கில் இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றில் கோரிக்கை; அமைச்சர் ஹர்ச அங்கீகாரம்

0
143

(நிப்ராஸ் மன்சூர்)

அம்பாறை உள்ளிட்ட கிழக்கில் நோயாளிகளுக்கான இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க பொருளாதார அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் கலாநிதி ஹர்ச டி சில்வா உறுதியளித்துள்ளதாக அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

பிரதமரின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள சுபசிரிய மன்றத்தின் சட்ட ஏற்பாடுகள் தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் (21) இடம்பெற்றது. இவ்விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் ஹரீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

இன்று நோயாளிகளுக்கான இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவை இந்திய அரசின் நிதி உதவியுடன் மேல் மற்றும் தென் மாகாணங்களில் அமுல்படுத்தப்பட்டு அப்பிரதேச மக்கள் நன்மையடைந்து வருவதுடன் இத்திட்டம் வெற்றியளித்துள்ளது. இதனால் இச்சேவையின் அவசியம் இன்று நாடளாவிய ரீதியில் உணரப்பட்டுள்ளது.

கிழக்கிலுள்ள மக்கள் நோயாளிகளை அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் பெரும் இன்னல்களை இன்றுவரை எதிர்நோக்கி வருகின்றனர். இதனை இல்லாமல் செய்ய நோயாளிகளுக்கான இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவையினை உடன் கிழக்கு மாகாணத்திற்கு விஸ்தரிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார்.

இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவையினை நோயாளிகளின் நலன்கருதி அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட கிழக்கில் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் இத்திட்டத்தினை அமுல்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா வாக்குறுதியளித்துள்ளார்.

இதனையிட்டு மகிழ்ச்சியடைவதோடு அமைச்சருக்கு நன்றிகளையும் தெரிவித்தார். நோயாளிகளுக்கான இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவை அபிவிருத்தி அடைந்த நாடுகளில் தாராளமாக கிடைக்கின்றது.

இந்தியா போன்ற நாடுகளிலும் இச்சேவை வெற்றியளித்துள்ளது. இத்திட்டத்தினை கிழக்கில் அமுல்படுத்துவதுடன் இதனுடன் இiணைந்ததாக ஜனாஸாக்களையும் ஏற்றுவதற்கான சேவையினையும் நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உன்னிச்சை குளம் பெருக்கெடுக்கும் அபாயம் ஏற்பட்டதால் அதன் வாண் கதவுகள் திறக்கப்பட்டன. இதன் விளைவாக அம்பாறை மாவட்டத்தில் நெற் செய்கை பண்ணப்பட்ட காணிகளுக்குள் தண்ணீர் தேங்கி நின்றமையினால் சுமார் 1400 ஏக்கர் காணிகளில் செய்கை பண்ணப்பட்ட பயிர்கள் அழிவடைந்துள்ளன. இதற்கான நஷ்டஈடுகளை பொருளாதார அமைச்சினூடாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொத்துவில் பிரதேசத்தின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக தேவை ஏற்பட்டுள்ளது. பொத்துவில் மக்களின் நீண்டகாலத் தேவையாகவுள்ள பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயத்தினை பிரதமர் தலையிட்டு உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பொருளாதார வர்த்தக மையங்கள், தொழில் பேட்டைகள் உருவாக்கப்பட்டு இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன.

அம்பாறையில் ஒலுவில் வர்த்தக துறைமுகம் மற்றும் மீன்பிடி துறைமுகம் என்பன காணப்படுகின்றன. ஆனால் இப்பிரதேசத்தில் வர்த்தக மையங்கள், தொழில் பேட்டைகளை உருவாக்க அரசாங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்பின்றி விரக்தி நிலைக்குச் சென்றுள்ளனர்.

இதனை அரசாங்கம் கருத்திற்கொண்டு இப்பிரதேச இளைஞர், யுவதிகளுக்கு தொழில்களைப் பெற்றுக்கொடுக்க அம்பாறை மாவட்டத்தில் வர்த்தக பொருளாதார மையங்கள், தொழில் பேட்டைகளை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பிரதி அமைச்சர் ஹரீஸ் கேட்டுக்கொண்டார் என பிரதி அமைச்சரின் முகநூலில் பதிவேற்றப்பட்டுள்ளது.

LEAVE A REPLY