பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானாவின் முயற்சி; சீனா நாட்டின் நிதி உதவியில் 13 வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்குள் ஏறாவூரும் உள்ளடக்கம்

0
139

(முகம்மட் அஸ்மி)

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்து ஏறாவூர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்களிற்கு முழுமையான நவீன வசதிகளை கொண்டதான மருத்துவ சேவையினை வழங்கும் பொருட்டு தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் அதற்கான தொடரான முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டு வரும் நிலையில், சீனா அரசாங்கத்தின் 85மில்லியன் டொலர் நிதி உதவியில் இலங்கையில் உள்ள 13 வைத்தியசாலைகளை நவீன வசதிகளை கொண்டதாக அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்திற்குள் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையையும் இணைத்துள்ளதாக சுகாதார போசணைகள் மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கும் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதும் குறித்த விடயம் அமைச்சரால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதுடன் மேற்படி செயற்திட்டம் தொடர்பான கள ஆய்வுகளுக்காக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழு ஒன்றினை அடுத்த வாரமளவில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதாகவும், நிர்மாண பணிகளை எதிர்வரும் ஜூலை மாதம் தனது தலைமையில் ஆரம்பித்து வைப்பதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதியளித்தார்.

குறித்த அபிவிருத்தி திட்டத்திற்குள் ஏறாவூர் வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு, கிளினிக் தொகுதி, வார்ட்டுகள், மாதர் பிரிவு, மருந்துக்களஞ்சியம் , தொற்றா நோய் பிரிவு, இரத்த சுத்திகரிப்பு மத்திய நிலையம், ஆய்வுகூடம், சத்திரசிகிச்சை கூடம், அவசரசிகிச்சை பிரிவு என்பன அமைக்கப்படவுள்ளதுடன், வைத்தியசாலைக்கான நவீன வைத்திய உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏறாவூர் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானாவின் முன்னெடுப்புக்களுக்கு பிரதி சுகாதார அமைச்சர் பைஸல் காசிம் அவர்கள் தனது முழு ஒத்துழைப்பினை வழங்கி வருகின்ற நிலையில் அமைச்சர் ராஜித சேனாரட்ன அர்களுடனான குறித்த சந்திப்பின் போது பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரட்ன, பிரதியமைச்சரின் இணைப்பு செயலாளர்களான நழீம் மற்றும் நசீர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY