காத்தான்குடியில் நடாத்தப்பட்ட ஆயுர்வேத வைத்திய முகாம் முற்றுகை: பொலிசார் விசாரணை

0
884

(விஷேட நிருபர்)

காத்தான்குடியில் நேற்று (20) புதன்கிழமை நடாத்தப்பட்ட ஆயுர்வேத வைத்திய முகாம் முற்றுகையிட்ட பொலிசார் அங்கிருந்த ஆயுர்வேத வைத்தியர்களை காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளில் ஈடுபட்டனர்.

காத்தான்குடி கடற்கரையிலுள்ள விடுதியொன்றில் நேற்று சித்த ஆயுர்வேத தொடுகை வைத்தியமுகாம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இந்த ஆயுர்வேத வைத்திய முகாம் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் காத்தான்குடி ஆயுர்வேத வைத்தியசாலை என்பவற்றுக்கு அறிவிக்கப்படாமலும் தெரியாமலும் நடாத்தப்பட்டுள்ளது.

போலியான ஆயுர்வேத வைத்தியர்கள் இந்த ஆயுர்வேத வைத்திய முகாமை நடாத்துவதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிக்கு தகவல் கிடைக்கப் பெற்றதையடுத்து காத்தான்குடி பொலிசார் மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் காத்தான்குடி ஆயுர்வேத வைத்தியசாலையின் அதிகாரி டாக்டர் ஜலால்தீன் ஆகியோர் அங்கு சென்று குறித்த ஆயுர்வேத வைத்தியமுகாமை நடாத்தியவர்களையும் அங்கு வைக்கப்பட்டிருந்த ஆயுர்வேத மருந்துப் பொருட்களையும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து இது தொடர்பான விசாரணைகளை மேற் கொண்டதுடன் இவர்களிடம் வாக்கு மூலங்களையும் பதிவு செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இவர்கள் தொடர்பில் காத்தான்குடி ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியிடமும் வாக்கு மூலத்தை பொலிசார் பதிவு செய்துள்ளனர்.

குறித்த ஆயுர்வேத வைத்திய முகாம் நடாத்திய வைத்தியர்கள் தொர்பில் சந்தேகம் இருப்பதாகவும் அவர்களிடம் ஆயுர்வேத வைத்தியர்களுக்கான முறையான அனுமதிப்பத்திரம் இல்லையெனவும் இவர்கள் வைத்திருந்த ஆயுர்வேத மருந்துகள் தொடர்பிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இந்த ஆயுர்வேத வைத்தியர்கள் நடாத்திய ஆயுர்வேத வைத்திய முகாம் ஒரு சட்ட விரோதமாகவும் எமக்கு அறிவிக்கப்படாமலும் நடாத்தப்பட்டதாகவும் இந்த ஆயுர் வேத வைத்தியர்கள் தொடர்பில் பலத்த சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இதன் போது எவரையும் கைது செய்யவில்லை எனவும் இது தொடர்பாக ஆயுர்வேத வைத்திய சபைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.

குறித்த ஆயுர்வேத வைத்தியர்கள் வெளிப் பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் என தெரிய வருகின்றது.

LEAVE A REPLY