பெருநாள் காணிவெல் களியாட்டம் இஸ்லாமிய கலாசாரத்திற்கு முரண்: ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றசாட்டு: தடை செய்யக்கோரி கடிதம்

0
131

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

நோன்புப்பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி பிரதேச சபைக்குச் சொந்தமான ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் பெருநாள் களியாட்ட நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.

இக்களியாட்ட நிகழ்வானது இஸ்லாமிய கலாசாரத்திற்கு முரணாக இடம்பெறுவதாகவும், பிரதேச சபையின் இரண்டாவது அமர்வின் போது பெருநாள் களியாட்ட நிகழ்வு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரி.அமிஸ்டீன் புறக்கணித்து நடைமுறைப்படுத்தி வருவதாக பிரதேச சபையில் பிரதித்தவிசாளர் உள்ளிட்ட அங்கம் வகிக்குமென்பது உறுப்பினர்களின் கையெழுத்துடன், களியாட்ட நிகழ்வினை நிறுத்துமாறு கோரி பிரதேச சபையின் தவிசாளர், செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஊடகச்சந்திப்பொன்றினை பிரதேச சபையின் உறுப்பினர் மௌலவி ஹாமித் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இதன் போது கருத்து வெளியிட்ட அவர், ‘ஓட்டமாவடி பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் ஒன்பது உறுப்பினர்களின் கையெழுத்துடன், அல் மாஸ் சமூக சேவை நிறுவனத்தினால் நடாத்தப்படும் குறித்த காணிவேல் களியாட்ட நிகழ்வினை உடனடியாக நிறுமாறு பிரதேச சபைச் செயலாளரூடாக தவிசாளர் ஐ.ரி.அமிஸ்டீனுக்கும் வேண்டுகோள் மகஜரொன்று எம்மால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 31.05.2018ம் திகதியன்று நடைபெற்ற பிரதேச சபை அமர்வில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும், இப்பிரதேசத்தில் பரவலாக விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளதுமான இக்களியாட்ட நிகழ்வினை இஸ்லாமிய வரையறைகளை மீறாது, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கல்குடாக் கிளையின் வழிகாட்டலுடன் மேற்கொள்ளுமாறு சபையோரினால் ஏகமனதானதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், அதனையும் உலமா சபையையின் ஆலோசனைகளையும் புறக்கனித்து இந்நிகழ்வு அரங்கேற்றப்பட்டு வருவதாக குற்றஞ்சுமத்தினார்.

இது தொடர்பாக ஓட்டமாவடி முஹைதீன் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலினால் பொது மக்களுக்கான நோன்புப்பெருநாள் அறிவித்தல் எனும் தலைப்பில் முக்கிய அறிவித்தலொன்று சகல பள்ளிவாயல் நிருவாகங்களுக்கும் அனுப்பப்பட்டு பகிரங்கமாக ஒலி பெருக்கியில் பொது மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த ‘களியாட்ட காணிவல்’ நிகழ்வு ஆண், பெண் கலப்பினால் கலாசார சீரழிவை ஏற்படுத்துமென்பதைக் கருத்திற்கொண்டு பிரதேசத்தின் பள்ளிவாயல்கள், சமூக நிறுவனங்கள் இணைந்து இதனைத்தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்ததுடன், பிரதேச சபையின் உதவித்தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு, இது விடயம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டது. கடந்த சனிக்கிழமை காலை 11 மணியளவில் வாழைச்சேனைப் பொலிசார் சம்பந்தப்பட்ட தரப்பினரை விசாரணைக்கு அழைத்திருந்தனர்.

இதன் போது காணப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஐந்து நாட்கள் இடம்பெறவிருந்த களியாட்ட நிகழ்வு மூன்று தினங்களாக மட்டுப்படுத்தப்பட்டதுடன், பெண்கள் கலந்து கொள்வது முற்றாகத்தடை செய்யப்படுவதாகவும் ஏற்பாட்டாளர்கள் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

இது தொடர்பாக கருந்து தெரிவித்த கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் இஸ்மாயில் பஹ்ஜி ‘ ஆரம்ப கட்டத்தில் நாம் இதனை இஸ்லாமிய வரையறைகளுடன் நடாத்துமாறு பல தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தோம்.

இருப்பினும், ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி இதனை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விடயத்தில் ஜம்இய்யாவின் பெயரைப் பயன்படுத்துவதனைத் தவிர்த்துக்கொள்வதுடன் இந்நிகழ்வு தொடர்பாக தமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை எனத்தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிகத்தகவலைப் பெற செயலாளரைத் தொடர்பு கொள்ளுமாறு எமது தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்தார் கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் இஸ்மாயில் பஹ்ஜி.

செயலாளரை எம்மால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் வைத்தியசாலையில் உள்ளதாகவும், தலைவரைத் தொடர்பு கொள்ளுமாறு குறுஞ்செய்தி அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இது விடயம் தொடர்பில் கோறளைப்பற்று ஓட்டமாவடி பிரதேச சபையின் தலைவர் ஐ.ரீ.அமீஸ்தீன் (அஸ்மி) அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவர் தொலைபேசிக்கு பதிலளிக்கவில்லை.

05 01 02 03 04

LEAVE A REPLY