முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் உட்பட ஐவரின் விளக்க மறியல் நீடிப்பு

0
110

(விஷேட நிருபர்)

முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் உட்பட ஐவரின் விளக்க மறியல் எதிர் வரும் 18.07.2018 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் (13.6.2018) புதன்கிழமை இடம் பெற்றன.

இந்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஸதீன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம் பெற்றன.

இந்த வழக்கு விசாரணைகளின் போது சந்தேக நபர்களில் ஒருவரான முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோரிடம் விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு அவர்களின் வாக்கு மூலங்கள் நீதிமன்றத்தினால் பதிவு செய்யப்பட்டன.

இதனையடுத்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஐவருக்குமான விளக்க மறியல் எதிர் வரும் 18.7.2018 வரை நீக்கப்பட்டதுடன் 18.7.2018ம் திகதிக்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் முன்னாள் இரானுவ சிப்பாயான மதுசிங்க(வினோத்) ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜராகியிருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 05 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 11.10.2015 அன்று கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY