மூவின மக்களிடையேயுமுள்ள தவறான புரிதல்கள் ஒழிக்கப்பட வேண்டும்: பெருநாள் செய்தியில் அலிஸாஹிர் மௌலானா

0
86

ஆட்சி அதிகாரங்கள் அனைத்திலும் அதி சக்தி வாய்ந்த அல்லாஹ்வின் திருப்பெயரால்  …

(முஹம்மட் அஸ்மி)

புனித நோன்பின் இனிய சுவையை அனுபவித்து அதன் நிறைவாக முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் ஈகைத் திருநாளை கொண்டாடி மகிழும் இச்சந்தர்ப்பத்தில் இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களும், சம அந்தஸ்தும் சௌஜன்ய சௌபாக்கியமும் பெற்று ஒரே தாயின் தவப்புதல்வர்கள் என்ற புரிந்துணர்வுடன் வாழ வேண்டுமென்று யாசித்தவனாக!

மூவின மக்களிடையேயுமுள்ள தவறான புரிதல்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் மக்களிடையே இடைக்கிடை தோன்றும் இடைவெளிகள் இனிவரும் காலங்களில் இல்லாதொழிந்து இணக்கப்பாடுகள் மூலம் பிணக்குகள் யாவும் தீர்க்கப்பட வேண்டும் என்றும் ஆசைப்படுகின்றேன்.

நாம் அனைவருமே அந்த இறைவனின் அடியார்கள் என்பதை மறக்காமலும் புறக்கணிக்காமலும் எமது செயற்பாடுகள் அனைத்தும் அமைதல் மூலமே எம்மை எதிர்நோக்கும் எதிர்கால சவால்கள் அனைத்தையும் முறியடித்து நாம் சார்ந்த சமூகத்தையும் நாட்டையும் ஒரு வழிப்படுத்தலாம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவனாக, முஸ்லீம் சமூகத்தை மட்டுமல்லாது அனைத்து இன மக்களையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன் .

எமக்குள் ஏற்பட்டுள்ள விடாப்பிடிகள் தளர்த்தப்பட்டும், குறைக்கப்பட்டும் எமக்குள் நல்லிணக்கம் ஏற்படுதல் மூலமே எமது வருங்கால சந்ததிக்கு நாம் முன்மாதிரியாக திகழ்ந்து சுபீட்சமான எதிர்காலமொன்றை ஐக்கிய உணர்வுடன் வாழக் கூடிய அளவிட்கு எம்மால் ஏற்படுத்திக் கொடுக்க முடியும் .

ஆக உண்மையும் , வாய்மையும் நேர்மையும் தூய்மையும் எமது வார்த்தைகளால் மட்டும் இல்லாது செயற்பாடுகள் அனைத்திலும் மேலோங்கி நிற்குமெனில் இந்த நாடு பொன் கொழிக்கும் செல்வப் பூமியாக மாறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை , இவ்வாறான எமது செயற்பாடுகள் உலகிற்கே முன் மாதிரியாக விளங்கும் என்பதில் நான் ஆணித்தரமான நம்பிக்கையுடன் உள்ளேன்.

மாண்புமிகு நோன்புகளின் நிறைவாக இவ் ஈகைத் திருநாளில் இச்சுவ செய்தியை சகல தரப்பினருக்கும் சமர்ப்பித்தவாறு விடை பிரியும் உங்கள் அன்பின் …

செய்யித் அலி சாஹிர் மௌலானா
பிரதி அமைச்சர்,
தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு

LEAVE A REPLY