பெருநாளை முன்னிட்டு மருதமுனையில் விசேட வீதி ஒழுங்குகள் அமுல்; அனைவரையும் ஒத்துழைக்குமாறு முதல்வர் றகீப் வேண்டுகோள்..!

0
85

(அஸ்லம் எஸ்.மௌலானா)

பெருநாள் தினங்களில் மருதமுனை கடற்கரைப் பிரதேசத்திற்கு உள்ளூர், வெளியூர் மக்கள் பெருமளவில் திரண்டு வருவதினால் ஏற்படக்கூடிய வாகன நெரிசல்கள் மற்றும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு இம்முறை நோன்புப் பெருநாளை முன்னிட்டு இப்பிரதேசத்தில் விசேட வீதி ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் மருதமுனை பள்ளிவாசல்கள் சம்மேளனம், ஜம்மியத்துல் உலமா மற்றும் தஹ்வா அமைப்புகளின் பிரதிநிதிகளும் மாநகர சபை உறுப்பினர்களும் ஊர் நலன் விரும்பிகளும் இணைந்து மேற்கொண்ட தீர்மானங்களின் பிரகாரம் இதற்கான ஒழுங்கமைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் ஊனமுற்றோரை ஏற்றி வருகின்ற வாகனங்களையும் வியாபார நடவடிக்கைகளுக்காக அனுமதிக்கப்பட்ட வாகனங்களையும் தவிர்ந்த ஏனைய அனைத்து மோட்டார் வாகனங்களும் கடற்கரை வீதிக்கு உள்நுழைவது முற்றாக தடை செய்யப்படும்.

காரியப்பர் வீதி தொடங்கி அக்பர் கிராமம் வரையான எல்லைக்குட்பட்ட கடற்கரை வீதி பரப்புக்கே இவ்வொழுங்கமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது பெருநாள் தினமான நாளை சனிக்கிழமையும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 2.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 வரையும் அமுலில் இருக்கும்.

காரியப்பர் வீதியால் வருகின்ற வாகனங்களுக்கு கலாசார மண்டப வளாகத்திலும் மஷூர் மௌலானா வீதியால் வருகின்ற வாகனங்களுக்கு மஷூர் மௌலானா விளையாட்டு மைதானத்திலும் அல்மதீனா பாடசாலையிலும் வாகன தரிப்பிட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று அல்மனார் வீதி மற்றும் அக்பர் வீதி ஆகியவற்றிலும் தரிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வாகன தரிப்பிடங்களை பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமாக மோட்டார் சைக்கிளுக்கு இருபது ரூபாவும் முச்சக்கர வண்டிக்கு முப்பது ரூபாவும் ஏனைய வாகனங்களுக்கு ஐம்பது ரூபாவும் அறவிடப்படும்.

மருதமுனை கடற்கரைப் பிரதேசத்தில் பெருநாள் கொண்டாட்டம் மற்றும் பொழுதுபோக்குகளுக்காக ஒன்றுகூடும் பொது மக்களின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள இவ்விசேட ஒழுங்குகளுக்கு அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குமாறு கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY