அனைத்து மக்களினதும் நல்வாழ்விற்காகவும் மானுட ஒற்றுமைக்காகவும் இந்நன்னாளில் பிராரத்திப்போம்

0
74

NFGG தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் அவர்களின் புனித ஈதுல் பித்ர் நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தி!

(NFGG ஊடக்கப்பிரிவு)

மலர்ந்திருக்கின்ற ஈதுல் பித்ர் நோன்புப்பெருநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். சிறப்பு மிக்க இத்தினத்தில் நம் அனைவரின் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாக வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன்.

உலகிலுள்ள முஸ்லிம்கள் இவ்வீகைத் திருநாளை மிக மகிழ்ச்சியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், உலகின் பல்வேறு பாகங்களிலும் அதிகாரத்தின் பெயராலும், அடக்கு முறைகளின் பெயராலும் பல்வேறு அநியாயங்களும் அக்கிரமங்களும் அரங்கேறிக்கொண்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

சிறுபான்மை சமூகங்களின் மற்றும் நலிவுற்ற மக்களின் மீதான அத்துமீறல்களும் அடக்கு முறைகளும் அழிப்பு நடவடிக்கைகளும் பொருளாதாரச்சுரண்டல்களும் பொதுவாகவே இன்று கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக உலக முஸ்லிம் உம்மத் எதிர்நோக்குகின்ற சவால்களும் அடக்குமுறைகளும் சொல்லில் விளக்க முடியாதவை.

தனிநபர்களில் தொடங்கி குடும்பம், சமூகம், தேசியம், சர்வதேசம் என்ற ரீதியில் இன்று வர்க்க பேதங்களும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் வியாபித்துச் செல்கின்றன.

எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியினை நிலைநாட்டவும்,நலிவுற்ற மக்களை பாதுகாப்பதற்குமாக நாம் இன்றைய தினத்தில் ஒன்று பட கடமைப்பட்டுள்ளோம்.

நாம் நமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் பிறரின் நலன்களுக்காகவும் மேம்பாடுகளுக்காகவும் அதிகம் அர்ப்பணிப்புகளுனும் தியாகங்களுடனும் செயற்பட முன்வரவேண்டும்.

நாம், நமது குடும்பம், நமது பிரதேசம் என்ற எல்லைகள் கடந்து உலகில் வாழுகின்ற அனைத்து மக்களின் நலன்களுக்காக செயலாற்றுகின்ற, நீதிக்காக குரல் கொடுக்கின்ற சமூகமொன்றினை கட்டியெழுப்ப இன்றைய நாளில் திடசங்கற்பம் பூண வேண்டும்.

“இந்த உலகம் அழிவது தீமை செய்பவர்களால் அல்ல. அத்தீமைகளைக்கண்டும் அதனை தடுக்காது மௌனம் காப்பவர்களினாலேயே.. ” என்ற அறிஞர்களின் கூற்று இங்கு நினவுபடுத்த தக்கதாகும்.

எனவே நமது நாட்டிலும் உலகலாவிய ரீதியிலும் வாழுகின்ற அனைத்து மக்களினதும் மீட்சிக்காகவும் நல்வாழ்விற்காகவும் மானுட ஒற்றுமைக்காகவும் இன்றைய நாளில் நாம் பிரார்த்திக்கவேண்டும்.

LEAVE A REPLY