மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர் காலமானார்

0
91

(பாறுக் ஷிஹான்)

நீண்ட நாட்களாக சுகவீனம் அடைந்திருந்த நிலையில் மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும் பிரபல எழுத்தாளரும் கலைஞருமான மக்கள் காதர் என அழைக்கப்படும் எம்.ஏ.காதர் தனது 75 ஆவது வயதில் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்.

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரான மக்கள் காதர் மன்னார் மாவட்டத்திற்கு பல்வேறு வகையிலும் பல்வேறு சேவைகளை மேற்கொண்டவர்.

‘ஜனாசா’ நல்லடக்கம் இன்று மாலை மன்னார் மூர்வீதியில் இடம் பெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மூர்வீதியை பிறப்பிடமாக கொண்ட மதார் முகைதீன் அப்துல் காதர் என்பது அவரது இயற்பெயராகும்.

எழுத்தியல் நாயகன், மக்கள் காதர் இன மத சமூக வேறுபாடுகளைக் களைந்து ஊடகத்துறையிலும், பொதுத் துறையிலும் தமிழ் மக்களோடு இணைந்து பணியாற்றினார்.

குறிப்பாக யுத்தம் கடுமையாக இடம்பெற்ற இறுதி தருனத்தின் போது காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மக்களின் மட்டில் அதித கரிசனையுடன் பணியாற்றினார்.

மன்னாரைத் தளமாக கொண்டு இயங்கி வந்த தகவல் தொடர்பாடலுக்கான ஊடக வலைபின்னல் நிலையத்தின் சிரேஷ்ட ஆலோசகராக பணியாற்றினார்.

அதேவேளை மன்னாரில் இருந்து மாதம் இருமுறை வெளி வந்த காலச்சுவடுகள் பத்திரிகையின் இணை ஆசிரியராக பணியாற்றி பல்வேறு விடயங்களை வாசகர்கள் மட்டில் எடுத்துச் சென்றார்.

மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு. இராயேப்பு ஜோசேப்பு ஆண்டகையின் பெரும் அன்பிற்கும், பாசத்திற்கும் பாத்திரமானவர்.

ஆயர் மற்றும் கத்தோலிக்க குருக்களின் மனித உரிமை பணிகளுக்கு பக்க பலமாக இருந்ததோடு ஆயர் மேதகு. இராயேப்பு ஜோசேப்பு ஆண்டகையின் பணிகளை பகிரங்க அரங்குகளில் துணிச்சலுடன் சிலாகித்து பேசியவராவார்.

சுமார் ஐம்பது ஆண்டுகால ஊடகத்துறைப் பணிக்காக முன்னாள் வட மாகாண ஆளுநர் சந்திரசிறி அவர்களினால் பொன்னடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இலக்கிய இரட்டையர்கள் என மன்னாரில் பரவலாக பேசப்படும் இருவரில் ஒருவரான மூத்த பத்திரிகையாளர் மக்கள் காதரின் இழப்பு ஊடகத்துறையிலும் ஒரு நிரப்ப முடியாத வெற்றிடமாகவே இருக்கின்றது.

LEAVE A REPLY