இலங்கையில் 28வது நோன்புடன் நோன்புப் பெருநாள் வருமா? தெளிவை எதிர்ப்பார்க்கும் பொது மக்கள்

0
598

ஷவ்வால் மாதத்திற்கான நோன்பு பெருநாளை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாயலில் 15.06.2018 வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுமென உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த முறை றமழான் 28வது நோன்புதான் வரும் என்றும் 28வது அன்று வியாழக்கிழமை நாட்டின் சில பகுதிகளில் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படுமென்றும் கூறப்படுகின்றது.

அதே போன்று நாட்டில் 14.6.2018 வியாழக்கிழமை மாலை ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை 39 நிமிடங்கள் இருக்கும் எனவும் அதை பார்ப்பது கஸ்டமாக இருக்குமெனவும் வானிலை அவதான நிலையம் தெரிவிப்பதாகவும் பல தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே நேரம் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்ஹ் றிஸ்வி முப்தி அவர்கள் வெள்ளிக்கிழமை ஆற்றிய உரையொன்றிலும் 28 நோன்புடன் வியாழக்கிழமை மாலை பிறை தென்பட்டால் நாங்கள் வெள்ளிக்கிழமை பெருநாளை கொண்டாடி விட்டு பின்னர் அந்த ஒரு நோன்பை கழாச் செய்து கொள்ள முடியும் எனக் கூறியுள்ளார்.

இவரது பேச்சும் 28வது நோன்புடன் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை வியாழக்கிழமை தென்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதையே காட்டுகின்றது.

இம்முறை புனித றமழான் மாதத்தின் முதல் நோன்பு ஆரம்பம் இலங்கையில் புதன் கிழமை மாலை ஆரம்பித்து வியாழக்கிழமை முதல் நோன்பை நோற்றிருக்க வேண்டும்.

அன்றைய தினம் பிறை தென்படும் என வானிலை அவதான நிலையம் அறிவித்த நிலையிலும் நாடு பூராகவும் வானம் இருள் சூழ்ந்த நிலையில் இருந்ததால் பிறை தென்பட வில்லை;. இதனால் ஷஃபான் மாத்தினை முப்பதாக பூர்த்தி செய்து பின்னர் வெள்ளிக்கிழமை 18ம் திகதி முன் நோன்பு நோற்கப்பட்டது.

எனினும் வெள்ளிக்கிழமை (18.5.2018) யன்று மாலை புனித றமழான் மாதப்பிறை மூன்றாவது பிறை போன்று பெரிய பிறையாக காட்சி தந்தது. இதை பலரும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

அந்த தினத்திலிருந்து இம் முறை 28 நோன்பு தான் வரும் என பலரும் பேசி வரும் நிலையில் 28 நோன்பன்று எதிர் வரும் 14.6.2018 வியாழக்கிழமை மாலை ஷவ்வால் மாத்திற்கான பிறை தென்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு பெரிய பள்ளிவாயலும் அகில இலங்கை இம் இய்யத்துல் உலமா சபையும் பிறைக் குழுவும் ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் நாளாக 29வது நோன்பன்று வெள்ளிக்கிழமை மாலை 15.6.2018 அன்று வைத்திருக்கும் நிலையில் 14.6.2018 வியாழக்கிழமை மாலை நோன்பு 28வதை பூர்த்தி செய்த நிலையில் இலங்கையில் எங்காவது பிறை கண்டால் அதை எவ்வாறு அறிவித்து பெருநாளை எடுப்பது என்பது பற்றி இன்னும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையோ அல்லது கொழும்பு பெரிய பள்ளிவாயலோ பிறைக்குழுவோ அறிவிக்கவுமில்லை. இது தொடர்பான தீர்மானத்திற்கு வரவுமில்லை.

நாட்டில் எங்காவது நோன்பு 28வது அன்று வியாழக்கிழமை மாலை அன்று பிறை கண்டால் அது ஒரு சர்ச்சையாக மாறி பிறையை கண்ட பிரதேசத்தில் பெருநாள் கொண்டாட ஏனையவர்கள் மறுதினம் பெருநாளை கொண்டாட இந்த செயற்பாடானது நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கான சவாலாக மாறிவிடும்.

இந்த நிலையையே கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் கின்னியா மூதூர் போன்ற பிரதேசங்களிலும் காணக் கூடியதாக இருந்தது.

இந்த நிலையை தவிர்ப்பதற்காக அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை, பிறைக்குழு மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாயல் இதில் எவ்வாறு நடந்து கொள்வது என்ற ஒரு காத்திரமான தீர்மானத்துக்கு வரவேண்டும்.

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ஒரு கருத்தையும் பிறைக்குழுவின் அங்கத்தவர் ஒருவர் இன்னுமொரு கருத்தையும் கூறினால் அது பாமர மக்கள் மத்தியில் ஒரு விதமான முறன்பாட்டை தோற்று விப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இது தொடர்பில் கொழும்பு பெரிய பள்ளிவாயலின் பிரதம நம்பிக்கையாளர் மௌலவி தஸ்லீம் அவர்களோடு தொடர்பு கொண்டு கேட்ட போது இது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் எதிர் வரும் திங்கட்கிழமையன்று ஒரு முடிவை வெளியிடுவதாகவும் கூறினார்.

அதே போன்று அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் முக்கியஸ்தர் ஒருவரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவ்வாறு 28வது நோன்புடன் 14.6.2018 வியாழக்கிழமை மாலை ஷவ்வால் மாதத்திற்கான பிறை தென்படுமாக இருந்தால் பிறையை கண்டவர்கள் அதனை அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் கிளைகள் நாடு பூராகவுமுள்ள பிரதேசங்களில் இருக்கின்றன. அங்கு சென்று கூறினால் அவர்கள் அதனை அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபைக்கு அறிவித்து ஒரு முடிவை எடுத்து நாடு பூராகவும் அறிவிப்பார்கள்.
அத்தோடு கொழும்பு பெரிய பள்ளிவாயலுக்கும் அறிவித்தால் அவர்களும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருக்கும் அறிவிப்பார்கள் என கூறினார்.

இவ்வாறு இந்த வருடம் ஒரு சர்ச்சையான விடயமாக மாறியுள்ள இந்த பிறை விவகாரத்திற்கு ஒரு சரியான பொறிமுறையுடன் ஒழுங்கு படுத்தலுடனான தீர்மானத்தை அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை, பிறைக்குழு கொழும்பு பெரிய பள்ளிவாயல், முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் எடுத்து மக்களுக்கு அறிவிக்க வேண்டும். இது சமூகத்தின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும்

எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஊடகவியலாளர்
காத்தான்குடி
08.06.2018

LEAVE A REPLY