ஜனாதிபதி சுதந்திர கட்சியின் தலைவராகவே செயற்படுவதே நல்லாட்சியின் வீழ்ச்சிக்கு காரணம்: இம்ரான் எம்.பி

0
113

(ஊடகப்பிரிவு)

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சுதந்திர கட்சியின் தலைவராக செயற்பட்டு வருவதே நல்லாட்சி அரசின் வீழ்ச்சிக்கு பிரதான காரணமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். செவ்வாய்கிழமை காலை தேசிய கல்வி ஊழியர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட நிர்வாகிகளை கிண்ணியாவில் சந்தித்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு ஜனாதிபதி சுதந்திர கட்சியின் தலைவராக செயற்பட்டதே காரணமாகும். ஐக்கிய தேசிய கட்சியின் பாரிய முயற்சியால் ஜனாதிபதியாக கொண்டுவரப்பட்ட அவர், அவருக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் செயற்பட்ட மகிந்தவின் விசுவாசிகள் பலருக்கு அமைச்சு பதவிகளை வழங்கி அரசாங்கத்தில் இணைத்து கொண்டதே நல்லாட்சி அரசின் மீது மக்கள் வெறுப்படைய பிரதான காரணமாகும்.

இவ்வாறு அரசாங்கத்தில் இணைத்து கொள்ளப்பட்ட மகிந்தவின் விசுவாசிகளே எமது அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து மக்கள் நல திட்டங்களுக்கும் தடையாக இருந்தனர். அரசாங்கத்தில் இருந்துகொண்டு மகிந்தவுக்கு சார்பாக வேலை செய்தனர். இதனால் எமக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியவில்லை. இதன் காரணமாக நல்லாட்சி அரசின் நன்மைகள் அனைத்தையும் சுதந்திர கட்சியும் மக்களின் வெறுப்புகளை ஐக்கிய தேசிய கட்சியும் பெற்றுக்கொண்டது.

இந்த சந்தர்பத்தில் ஜனாதிபதிக்கு நாம் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறோம். நீங்கள் சுதந்திர கட்சியின் தலைவராக செயற்பட்டது போதும். இனியாவது ஐக்கிய தேசிய கட்சியால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதியாக செயற்படுங்கள். நிலைமை இவ்வாறே நீடித்து ஒருவேளை மஹிந்த ஆட்சிட்கு வந்தால் உங்கள் பின்னால் யாரும் இருக்கமாட்டார்கள். அப்போது ஐக்கிய தேசிய கட்சியின் உதவியே உங்களுக்கு தேவைப்படும். நீங்கள் தேசிய பட்டியல் வழங்கிய உறுப்பினர்கள் கூட இன்று உங்கள் கூட இல்லை. ஆகவே நீங்கள் அதிகாரத்தை இழந்தால் என்ன நடைபெறும் என்பதை கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரே போட்டியிடுவார். அந்த தலைவர் ரணில் விக்ரமசிங்ககவா வேறு ஒருவரா என்பதை நாங்கள் தேர்தலுக்கு முன் அறிவிப்போம். இந்த தேர்தலை இலக்காக கொண்டு பாரிய வேலைத்திட்டங்களை நாம் ஆரம்பிக்கவுள்ளோம். இந்த ஒன்றரை வருடங்களில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களை ஒன்றிணைத்து ஐக்கிய தேசிய கட்சியின் தனி அரசாங்கம் ஒன்றை நாம் ஏற்படுத்துவோம் என தெரிவித்தார்.

LEAVE A REPLY