மஹிந்தவின் இப்தாரில் முஸ்லீம் அரசியல்வாதிகளின் நிலை விளங்கியது

0
421

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அவர்களின் மனதில் மர்ஹூம் அஸ்வர் ஹாஜியின் வெற்றிடம் அப்படியே இருக்க அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற வருடாந்த இப்தார் நிகழ்வானது பல முக்கிய செய்திகளை வெளிக்காட்டி நிற்கிறது.

இந்த இப்தார் நிகழ்வுக்கு முஸ்லிம் நாடுகளின் தூதரக தூதுவர்கள், வெளிநாட்டு தூதரக முக்கிய அதிகாரிகள், பொதுஜன பேரமுன கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மட்டுப்படுத்தப்பட்ட அழைப்பு விடுக்கப்பட்ட, முக்கிய பிரமுகர்கள் மட்டுமே உள்வாங்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மத்தியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவரும் நல்லாட்சி அரசின் முக்கிய அமைச்சருமான ரவூப் ஹக்கிம் திடீரென சபைக்கு வந்து சபையில் இருந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். மூடிய அறையில் முக்கிய பிரமுகர்களுடனான சந்திப்பில் தானும் கலந்துகொண்டிருந்த அமைச்சர் ஊடகவியலாளர்கள் களைந்து சென்ற பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவாக இருந்து பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் எம்.பிக்களாகவும் நல்லாட்சி அரசில் இராஜாங்க அமைச்சர்களாகவும் இருக்கும் AHM. பவுஸி, MLAM. ஹிஸ்புல்லாஹ் ஆகியோரும் இந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பங்காளி கட்சியான முன்னாள் அமைச்சர் ALM. அதாவுள்ளா அவர்களின் தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கட்சி தலைவர் ALM. அதாவுள்ளா அவர்களும் இந்த இப்தாரில் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த 30.05.2018 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மேலும் இரு கட்சி முக்கியஸ்தர்கள் சகிதம் அங்கும் முன்னாள் அமைச்சர் ALM. அதாவுள்ளா கலந்து கொண்டது இங்கு குறிப்புட தக்க ஒன்றாகும்.

சமூக வலைத்தளங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு எதிராக முஸ்லிங்கள் வசைபாடிக் கொண்டிருந்தாலும் இப்தாருக்கு அழைக்கப்பட்ட அதிதிகளில் அதிகமானோர் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், எம்.பிக்கள் என அவரது இல்லம் நிரம்பிவழிந்தது. தனது கட்சிக்கு உரித்தான மொட்டுநிற தோப்பு அணிந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களும் அவரது சகல குடும்ப உறுப்பினர்களும் எல்லோரையும் இன்முகத்துடன் வரவேற்றபோது அவர்களது முகத்தில் வருங்கால அரசியல் மாற்றத்தின் விதை விளங்கியது.

LEAVE A REPLY