நோன்பும் நொந்த மக்களும்

0
228

(Mohamed Nizous)

உடுப்பெடுத்துக் கொடுக்க
ஒரு வழியும் இன்றி
அடுப்படியில் கவலையில்
ஆயிரம் உம்மாமார்கள்

ஒழுகின்ற கூரையை
ஒழுங்கமைக்க முடியாது
அழுகின்ற கண்களுடன்
ஆங்காங்கே ராத்தாமார்கள்

கரண்டை வெட்டிப் போட
கட்ட வழி ஏதும் வழியின்றி
இருண்ட வீட்டில் விளக்கில்
எத்தனையோ குடும்பங்கள்

கொஞ்சமாக ஆக்கி
குழங்தைகளுக்குக் கொடுத்து விட்டு
எஞ்சியதில் கால் வயிற்றுடன்
எத்தனையோ பேர் சஹர் செய்வார்

பெரு நாள் நெருங்கி வர
பிள்ளைகள் ஆசைப்பட
இரு தலைக் கொள்ளி
எறும்பாகப் பெரியவர்கள்

நோன்பு பிடித்த களைப்புடன்
நொந்து கூலி வேலை செய்து
தான் படும் கஷ்டத்தை
தாயிடம் சொல்லா மகன்கள்

இப்படி சமூகத்தில்
ஏராளப் பிரச்சினைகள்
அப்படியே அத்தனையும்
அலட்சியப் படுத்தி விட்டு

எப்போதும் போல
இயக்கச்சண்டைகள்
தப்பா சரியா என்று
தர்க்கங்கள் விவாதங்கள்

அப்பாவி மக்களின்
அவலங்களைப் போக்க
ஆங்காங்கே ஒரு சிலர்கள்
அர்ப்பணிப்பு செய்தாலும்

தூங்குகின்றது இன்னமும்
தூர நோக்குச் செயல்கள்.

போலிப் புகழுக்காய்
பொருள் செலவு செய்பவர்கள்

மேலதிகமாய் சமைத்து
மிச்சத்தை கொட்டுபவர்கள்

நாலு ஐந்து ஆடையென
மோலில் சென்று வாங்குபவர்கள்

ஹோலில் இப்தார் வைத்து
கூடிக் களிப்பவர்கள்

ஏழைகளின் பெரு மூச்சை
எண்ணிப் பார்க்க வேண்டும்

வாழ வழியில்லாது
வாடுகின்ற மக்களுக்காய்
தோள் கொடுக்க வர வேண்டும்
தூயவன் அருள் புரிவான்.

LEAVE A REPLY