எனக்கு துரோகம் செய்துவிடாதீர்கள்: பிரதியமைச்சர் அமீர் அலி

0
982

(வாழைச்சேனை நிருபர்)

எங்களிடத்தில் வருபவர்களை அவமானம், அசிங்கம், அருவறுப்பு செய்கின்ற வேலைகளை யாரும் செய்து விடாதீர்கள். அவ்வாறு செய்து கொண்டால் எனக்கு செய்யும் துரோகமாக இருக்கும் என கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாழைச்சேனை பிரதேசத்தில் பாரிய மாற்றங்களை நாங்கள் கண்டுள்ளோம். அந்த மாற்றங்களை கௌரவமாக வரவேற்கின்றோம். எங்களோடு இணைந்து கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கௌரவப்படுத்தி வைத்துக் கொள்ளும் நிலவரம் எங்களிடத்தில் இருக்க வேண்டும்.

எங்களோடு இணைந்து கொண்டவர்களை நாங்கள் கடந்த கால அரசியலில் இரண்டாம் பட்சமாக பார்த்தது கிடையாது. அதேபோன்று நீங்களும் அவர்களுக்கு அந்த கௌரவத்தை வழங்க வேண்டும். என்னிடத்தில் புதிதாக வருபவர்களை நான் எவ்வாறு கௌரவப்படுத்துகின்றேனோ அதே போன்று கௌரவத்தை நீங்கள் வழங்க வேண்டும்.

அவமானப்படுத்துகின்ற, அசிங்கப்படுத்துகின்ற, அருவறுப்பு செய்கின்ற வேலைகளை யாரும் செய்து விடாதீர்கள். அவ்வாறு செய்து கொண்டால் எனக்கு செய்யும் துரோகமாக இருக்கும். எங்களிடத்தில் வருபவர்கள் தெளிவை தேடியும், தெளிவை பெற்றுக் கொண்டும் வருகின்றார்கள். ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும் என்று வருகின்றார்கள். மாற்றம் என்பது ஒரு வருடத்தில் நடக்கின்ற விடயமல்ல. எங்களிடத்தில் வருபவர்களை சேர்த்துக் கொள்வதற்கு உங்களுடைய ஒத்தாசைகள் எங்களுக்கு தேவை என்றார்.

வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழக தலைவர் எம்.எப்.எம்.ஜௌபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதியமைச்சரின் இணைப்பாளர்களான எம்.எஸ்.எம்.றிஸ்மின், எச்.எம்.தௌபீக், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வட்டாரக் குழு உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கிராமிய பொருளாதார அமைச்சின் பத்து இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மீன்பிடி வலைகள் 56 பேருக்கும், தண்ணீர் பம் 17 பேருக்கும், இடியப்பம் அவிக்கும் உபகரணம் 07 பேருக்கும், ஓடாவி உபகரணம் 10 பேருக்கும், மீனவர் பாதுகாப்பு அங்கி 45 பேருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இளம் கண்டுபிடிப்பாளர்;கள் ஐந்து பேரை ஊக்குவிக்கும் வகையில் அமைச்சினால் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

01 (9) 01 (5) 01 (8)

LEAVE A REPLY