கல்முனை மாநகர சபையின் நிதிக் குழு உட்பட மேலும் இரண்டு குழுக்கள் எதிரணி வசம். சபையில் அமளி துமளி

0
171

(கல்முனை செய்தியாளர்)

கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு சபா மண்டபத்தில் கடந்த புதன்கிழமை (30) முற்பகல் 11.20 மணியளவில் முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட நேரத்தை விட சற்றுத்தாமதமாக ஆரம்பாமானது.

இதன் போது கடந்த மாத கூட்டறிக்கை அங்கீகரிப்பதற்காக முதல்வரினால் சபைக்கு விட்ட போது சபை உறுப்பினர்களால் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. கடந்த மாதக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதா அல்லது முடிவுக்கு கொண்டுவரப்பட்டதா எனும் கேள்விகள் எழுப்பப்பட்டதுடன் கடந்த மாத கூட்டறிக்கையை திருத்தங்களுடன் அங்கீகரிக்கப்படுவதாக சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அடுத்து நிதிக் குழுவினை தெரிவு செய்வது தொடர்பாக முதல்வரினால் உறுப்பினர்களின் கருத்தரிய சபைக்கு விட்ட போது உறுப்பினர்கள் மத்தியில் பல வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு உறுப்பினர் ஒருவர் வெளிநடப்பு செய்ய முயன்றதுடன் பகிரங்க வாக்களிப்பினூடாக நிதிக்குழுவிற்கான உறுப்பினரை தெரிவு செய்வதாக சபையினால் தீர்மானிக்கப்பட்டது.

முதல்வர் சம்பிரதாய பூர்வமாக நிதிக்குழுவின் தலைவராக இருப்பதுடன் மேலும் 5 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு முதல்வரின் அனுமதியுடன் மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலியினால் நடாத்தப்பட்டது.

இதன் போது சாய்ந்தமருதை மையமாக தோடம்பழச் சின்னத்தில் களம் இறங்கிய சுயட்சைக்குழு 4இன் உறுப்பினர்களான என்.எம். றெஸ்மிர் 22 வாக்குகளையும், ஏ.ஆர்.எம். அஸீம் 22 வாக்குகளையும், இலங்கை தமிழரசுக் கட்சியின் குலசேகரம் மகேந்திரன் 22 வாக்குகளையும், பொன்னைய்யா செல்வநாயகம் 22 வாக்குகளையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சி.எம். முபீத் 23 வாக்குகளையும் பெற்று தெரிவாகியதுடன் கல்முனை மாநகர சபையின் நிதிக்குழு எதிரணி வசமாகியது.

15 ஆயிரம் ரூபாவிற்கு மேற்பட்ட மாநகர சபையின் செலவீனங்களுக்கு நிதிக்குழுவின் அங்கீகாரம் பெறப்படவேண்டும் என்பது இவ்விடத்தில் நினைவூட்டப்பட வேண்டிய விடயமாகும்.

மேலும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு தெரிவாகிய எம்.எஸ். உமர் அலி 15 வாக்குகளையும், ஏ.எம். றோசன் அக்தர் 15 வாக்குகளையும், ஏ.சி.ஏ. சத்தார் 15 வாக்குகளையும், றஹ்மதுல்லாஹ் மன்சூர் 16 வாக்குகளையும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சுமித்ரா ஜெகதீஸன் 14 வாக்குகளையும் பெற்றிருந்தனர். மேலும் 5 உறுப்பினர்கள் ஒரு வாக்கு வீதமும், ஒரு உறுப்பினர் இரண்டு வாக்குகளையும் பெற்றதுடன் இரண்டு உறுப்பினர்கள் வாக்கெடுப்பிலிருந்து விலகியும் இருந்தனர்.

bbஇதேவேளை சுகாதாரம் மற்றும் திண்மக் கழிவு அகற்றல் குழு, பொது வசதிகள் மற்றும் நலன்புரிக் குழு ஆகிய இரண்டு உபகுழுக்களுக்குமாக தலா 6 உறுப்பினர்கள் தெரிவிற்காக முதல்வரினால் சபைக்கு விட்ட போது எதிரணியினரால் 2 குழுக்களையும் இரண்டு அணியினரும் பங்கிட்டுக்கொள்வோம் எனும் யோசனை முன்வைக்கப்பட்டது. இவ் யோசனையை நிரகரித்த ஆளும் தரப்பினர் இரண்டு குழுக்களுக்குமான உறுப்பினர்களை பகிரங்க வாக்கெடுப்பின்றி எதிரணியினரை தேர்ந்தெடுத்து தருமாறு ஆளும் தரப்பினர் வேண்டியிருந்தனர். இவ்வறிப்பை அடுத்து உறுப்பினர்கள் மத்தியில் பல தரப்பட்ட வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு சபையில் அமளி துமளி ஏற்பட்டதை அடுத்து முதல்வரினால் சபை ஒத்தி வைக்கப்பட்டது.

சில நிமிடங்களில் மீண்டும் ஆரம்பமாகிய சபை அமர்வில் மேற்கூறப்பட்ட இரண்டு குழுக்களுக்குமான உறுப்பினர்களின் பெயர் பட்டியல் எதிரணியினரால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சுகாதார மற்றும் திண்மக் கழிவு அகற்றல் குழுவின் உறுப்பினர்களாக சாய்ந்தமருது தோடம்பழச் சின்னம் சுயட்சைக் குழு 4 இல் தெரிவாகிய எம்.ஐ.ஏ. அஸீஸ், எம்.ஏ. றபீக், இலங்கை தமிழரசுக் கட்சியின் சாமுவேல் சந்திர சேகரம், சோமசுந்தரம் குபேரன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வை.கே.றஹ்மான் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏ.ஜி.எம். நதீர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அடுத்து பொது வசதிகள் மற்றும் நலன்புரிக் குழுவுக்காக சாய்ந்தமருது தோடம்பழச் சின்ன சுயட்சைக்குழுவின் எம்.வை.எம். ஜௌபர், எம். பஷீர், இலங்கை தமிழரசுக் கட்சியின் கந்தசாமி சிவலிங்கம், திசவீரசிங்கம் ராசரத்தினம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இசட்.ஆர்.எச். றஹ்மான் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எம்.ஐ.எம்.ஏ. மனாப் ஆகியோர் தெரிவானார்கள்.

அடுத்து முதல்வரின் அறிவித்தல்கள் முன்வைக்கப்பட்டது. இதன் போது கல்முனை மாநகர பிரதேசத்தில் வீதி விளக்குகள் ஒளிராது பழுதடைந்து காணப்படுவதனால் அவைகளை மாற்றியமைப்பதற்காக ஆயிரம் எல்.இ.டி மின்குமிழ்களை கொள்வனவு செய்வதற்காக கேள்வி கோரலை மேற்கொள்ளவும் மற்றும் மாநகர சபையின் சாய்ந்தமருதில் உள்ள திண்மக் கழிவுகள் அகற்றும் இடத்தில் குப்பைகளின் மேல் மண்ணிடுவதற்காக ஐந்து இலட்சம் ரூபாவிற்கு மண்களை கொள்வனவு செய்வதற்கான கேள்வி கோரலை மேற்கொள்வதற்கான அனுமதியினை சபைக்கு விட்ட போது சபை அங்கீகாரம் வழங்கியது.

பின்னர் உறுப்பினர்களின் உரை இடம்பெற்றதுடன் இதன் போது திண்மக் கழிவு அகற்றல் தொடர்பாக அநேக உறுப்பினர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. ஒன்று ஒன்றரை மாதங்களாக திண்மக்கழிவுகள் அகற்றப்படாமல் வீடுகளில் தேங்கியிருப்பதனால் இவைகளை உரிய முறையில் அகற்றுவதற்கு மாநகர சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மேலும் இன்னும் பல விடயங்கள் தொடர்பாகவும் உரைகள் நிகழ்த்தப்பட்டிருந்தது. இதனை அடுத்து முதல் இம்மாதக்கூட்டத்தினை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்ததை அடுத்து கூட்டம் நிறைவுபெற்றது. சபை நடவடிக்கைகளை மாநகர சபையின் செயலாளர் ஏ.எம். ஆரிபினால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

மக்களின் வாக்குகளைப் பெற்று சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தான் சார்ந்த மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை அடையாளங்கண்டு அவைகளை மாநகர சபையின் கவனத்திற்கு கொண்டு வந்த சிறந்த தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும். இதற்கு மாறாக சில உறுப்பினர்கள் மக்கள் சார்ந்த விடயங்கள் தொடர்பாக எதுவுமே பேசாமல் மௌனமாக இருந்த நிலமையினையும் அவதானிக்க முடிந்தது. எனவே எதிர்வருகின்ற கூட்டங்களிலாவது இவ்வாறான மௌனங்கள் கலையப்பட வேண்டும்.

மேலும் கல்முனை மாநகர சபை முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட மாநகர சபை என்பதனால் இந்த நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்று வரும் மற்றும் இடம்பெற்று முடிந்த முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள், பலி சுமத்தல்களுக்கு எதிராகவும் பலத்த குரல் எழுப்பப்பட வேண்டியதுடன் இவைகள் தொடர்பாக பல தீர்மானங்களையும் நிறைவேற்ற வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வுகளையும் நிவாரணங்களையும் துரித கதியில் பெற்றுக்கொடுக்க சம்மந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதுடன் இனி வருகின்ற சபை அமர்வுகளிலாவது இவ்வாறான விடயங்கள் கருத்தில் எடுத்து செயற்படுவதற்கு மாநகர சபை உறுப்பினர்கள் முன்வரவேண்டும்.

LEAVE A REPLY