எம்.பி பதவியினை யாருக்கு வழங்கினால் அமைச்சர் றிசாத்தின் அரசியல் பலம் அதிகரிக்கும்?

0
235

(முகம்மத் இக்பால், சாய்ந்தமருது)

பாராளுமன்ற உறுப்பினர் நபவியின் ராஜினாமாவை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்தினை நிரப்புவதற்கு பலமான போட்டிகளும், குழப்பங்களும் அ.இ.ம.காங்கிரசுக்குள் நிலவுவதனை காணக்கூடியதாக உள்ளது.

இது அமைச்சர் ரிசாத்துக்கு ஏற்பட்டுள்ள புதிய அனுபவமாகும். இதனையே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பதினெட்டு வருடங்களாக எதிர்கொண்டு வருகின்றார்.

கடந்த பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிட்டு சுமார் 26,000 விருப்பு வாக்குகளை அமைச்சர் ரிசாத் பெற்றிருந்தார். அதில் 15,000 வாக்குகள் தமிழர்களுடையதாகும்.

ஆனால் தமிழர்களின் வாக்குகள் நிரந்தரமானதில்லை என்பது அமைச்சர் ரிசாத்துக்கு நன்கு தெரியும். அதனாலேயே அடுத்த தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் நடவடிக்கையாக தனது செல்வாக்கினை அங்கு அதிகரிக்கும் பொருட்டே புத்தளத்தை சேர்ந்த நபவி அவர்களுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தினை வழங்கியிருந்தார்.

ஆனாலும் கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு பின்பே நபவி அவர்கள் ராஜினாமா செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார். என்ன நோக்கத்துக்காக நபவிக்கு எம்பி பதவி வழங்கப்பட்டதோ அந்த நோக்கம் அங்கு நிறைவேறவில்லை.

கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அமைச்சர் ரிசாத்தினால் நிறுத்தப்பட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்ததுடன், தனது எதிரி கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் புத்தளத்தில் அமோக வெற்றியினை பெற்றிருந்தது.

உள்ளூராட்சிமன்ற பெறுபேறுகள் அமைச்சர் ரிசாத்துக்கு சாதகமாக இருந்திருந்தால் எம்பி பதவியிலிருந்து நபவி அவர்கள் ராஜினாமா செய்திருக்க வாய்ப்பில்லை.

அ.இ.ம.காங்கிரசின் வளர்ச்சி பற்றி என்னதான் பேசினாலும் ஓர் அரசியல்வாதி என்ற ரீதியில் அமைச்சர் ரிசாத்தின் தனிப்பட்ட அரசியல் நலன் சார்ந்தே முடிவெடுப்பார். அதனை தவறு என்று கூறமுடியாது. எந்த அரசியல்வாதியும் அதனையே செய்வார்கள்.

தான் தேர்தலில் தோல்வியடைந்தால் என்ன முகத்தைக்கொண்டு மக்கள் மத்தியில் ஒரு கட்சியின் தலைவராக செயற்படமுடியும் என்று சிந்திக்காமல் அமைச்சர் ரிசாத் இருக்கமாட்டார்.

இங்கே ஊர் என்ற போர்வையிலும், கட்சி வளர்ச்சி என்ற ரீதியிலும் தனிப்பட்ட நபர்களை திருப்திப்படுத்துவதா அல்லது அனைத்திலும் பிந்தங்கிக்கிடக்கின்ற வன்னி மக்களை முன்னேற்றுவதா என்ற முடிவினை எடுக்கவேண்டிய நியாயப்பாடுகள் அமைச்சர் ரிசாத்துக்கு உள்ளது.

எம்பி பதவியினை கோருகின்றவர்களின் பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் வன்னி மாவட்ட மக்களின் பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் மிகவும் பாதாளத்தில் உள்ளது.

இந்தநிலையில் வெற்றிடமாக இருக்கின்ற தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வன்னி மாவட்டத்துக்கு வழங்குவதன் மூலம் அம்மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சருக்கு உதவியாக இருப்பதுடன், எதிர்வரும் பொது தேர்தலில் தயக்கமின்றி களமிறங்கும் மாவட்டமாக வன்னி மாவட்டத்தினை கட்டியெழுப்ப முடியும் என்பதே யதார்த்தமாகும்.

அவாறு வன்னி மாவட்டமின்றி வேறு மாவட்டத்துக்கு அப்பதவி வழங்கப்பட்டால் அம்மாவட்டத்திலேயே எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சியினை அமைச்சர் மேற்கொள்கின்றார் என்றே ஊகிக்க முடியும்.

LEAVE A REPLY