காத்தான்குடி சம்மேளனத்தின் பொதுச் சபைக் கூட்டத்தில் தலைவர் தெரிவின் போது குழப்ப நிலை, கைகலப்பு!

0
728

(விஷேட நிருபர்)

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பொதுச் சபைக் கூட்டத்தில் தலைவர் தெரிவின் போது குழப்ப நிலை கைகலப்பு ஏற்பட்டதால் தலைவர் தெரிவு பிற்போடப்பட்டு ஏனைய பதவிகளுக்குரியவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளுக்கான புதிய நிருவாகிகளை தெரிவு செய்வதற்கான பொதுச் சபைக் கூட்டம் இன்று (29) செவ்வாய்க்கிழமை பிற்பகள் காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் சம்மேளனத்தின் பொதுச் சபை உறுப்பினர்கள் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.தௌபீக் தலைமையில் கூட்டம் ஆரம்பமாகி சம்மேளனத்தின் கடந்த பொதுக் கூட்டறிக்கை, செயற்பாட்டு அறிக்கை கணக்கறிக்கை என்பன வாசிக்கப்பட்டு அவைகளை சபை ஏற்றுக் கொண்டது..

இதையடுத்து தலைவர் தெரிவு இடம் பெற்றது. சம்மேளனத்திற்கான இவ்வாண்டுக்கான தலைமைப்பதவி காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த தலைமைப்பதவிக்கு காத்தான்குடி மீரா பெரிய ஜும்ஆப்பள்ளிவாயல் நிருவாகத்தைச் சேர்ந்த ஜௌபர் என்பவரை சிபாரிசு செய்திருந்தது.

இந்த நிலையில் குறித்த நபரை தலைவராக வைக்க வேண்டாம் என சிலர் கூறியதையடுத்து கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதன் போது சிலருக்கிடையே கைகலப்பும் ஏற்பட்டது.

எனினும் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.தௌபீக், முன்னாள் செயலாளர் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.சபீல் நழீமி மற்றும் சம்மேளன சிரேஷ்ட உறுப்பினர்கள் சபையை அமைதிப்படுத்தி தலைவர் பதவியை விடுத்து ஏனைய செயலாளர் பிரதி தலைவர், உப தலைவர்கள் பொருளாளர், உப பொருளாளர், கணக்காளர் போன்ற பதவிகளுக்கான தெரிவை நடாத்தினர். இதற்கான தெரிவு சுமூகமாக நடைபெற்றது.

சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு வேறு ஒருவரை காத்தான்குடி மீரா பெரிய ஜும்ஆப்பள்ளிவாயல் தெரிவு செய்து தரும் வரை சம்மேளனத்தின் தற்காலிக தலைவராக தற்;போதைய உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலின் தலைவர்; எம்.சி.எம்.ஏ.சத்தார் செயற்படுவதென தீர்மானிக்கப்பட்டது.

சம்மேளனத்தின் புதிய செயலாளராக காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை சிபாரிசு செய்துள்ள அல்ஹாபிழ் மௌலவி எஸ்.எச்.றமீஸ் ஜமாலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

DSCN0943 DSCN0945 DSCN0946 DSCN0947

LEAVE A REPLY