மூன்றாவது முறையாகவும் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணி

0
159

11வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (27) மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.

இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன.

இப்போட்டியில், நாணய சுழற்சியை வென்ற சென்னை அணியின் தலைவர் முதலில் பந்துவீச்சு தீர்மானித்தார்.

துடுப்பாட்டத்தில் ஹைதராபாத் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி 47 ஓட்டங்களையும் யூசுப் பதான் 45 ஓட்டங்களையும் குவித்தனர்.

பந்துவீச்சில் சென்னை அணி சார்பில் இங்கிடி மற்றும் கரண் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதற்கிடையில் 33 முறை ஸ்டெம்பிங் செய்து தோனி ஐபிஎல் போட்டியில் அதிக முறை ஸ்டெம்பிங் செய்தவர் எனும் சாதனையை படைத்தார்.

இந்நிலையில் 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்களை எடுத்தது.

ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை எதிர்க்கொண்டு 179 ரன்கள் என்ற இலக்கை சென்னை அணி எட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. அதேநேரம், நடப்பு ஐபிஎல் தொடரில் அந்த அணியை 3 முறை வீழ்த்திய நம்பிக்கையோடு சென்னை அணியின் இன்னிங்ஸை வாட்சன் மற்றும் டூப்ளசி ஆகியோர் தொடங்கினர்.

ஆரம்பத்தில் நிதானமாக விளையாட ஆரம்பித்த சென்னை அணி சில ஓவர்களுக்குப் பின் அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்தது.

சந்தீப் ஷர்மா வீசிய நான்காவது ஓவரின் கடைசி பந்தில் டூப்ளசி ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது சென்னை அணி 4 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து, ஷேன் வாட்சனுடன், ரெய்னா கைகோத்தார். இந்த ஜோடி துடுப்பெடுத்தாட தொடங்கியதுமே போட்டி சென்னை அணியின் பக்கம் திரும்பியது.

பவர் பிளே ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ஓட்டங்கள் எடுத்திருந்த சென்னை, இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி இலக்கை நோக்கி மிக வேகமாக முன்னேறியது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சன், 33 பந்துகளில் அரை சதம் அடித்தார். அவர், சந்தித்த முதல் 10 பந்துகளில் ரன் எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது விக்கெட்டுக்கு 117 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், பிராத்வொய்ட் வீசிய பவுன்சரில் ரெய்னா ஆட்டமிழந்தார். அவர் 24 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து எடுத்திருந்தார்.

மறுமுனையில் ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை பவுண்டரி எல்லையை நோக்கி விரட்டிக் கொண்டிருந்த வாட்சன், 51 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

ஹைதராபாத் அணி நிர்ணயித்த இலக்கை சென்னை அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.

இதன்மூலம், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர்கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

தொடக்க வீரராகக் களமிறங்கிய ஷேன் வாட்சன் 57 பந்துகளில் 117 ஓட்டங்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அம்பதி ராயுடு 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

adaderana.lk

LEAVE A REPLY