மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு

0
287

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.முகம்மட் றியாஸ் தெரிவித்தார்.

இதில் 2017ம் ஆண்டு 12 பேரும் 2018 இவ்வாண்டின் இதுவரைக்குமான காலப்பகுதியில் 4 பேரும் யாணை அடித்து உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2017ம் ஆண்டு யாணை தாக்கிய 26 பேர் காயமடைந்துள்ளதுடன் 76பேரின் உடமைகள் யாணையினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் 72,58,861.00 ரூபா பெறுமதியான நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன.

2018 இவ்வாண்டு இதுவரைக்குமான காலப்பகுதியில் ஒரு மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் யாணையின் தாக்கத்தினால் 83 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.அதில் போரதீவுப் பற்று (வெல்லாவெளி) பிரதேச செயலாளர் பிரிவில் 45 குடும்பங்கள் அதிகளவாக பாதிக்கப்பட்டுள்ளன. அத்தோடு 64 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, வவுணதீவு, செங்கலடி, கோறளைப்பற்று மத்தி, வாகரை, பட்டிப்பளை, வாழைச்சேனை, கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே யானையின் தாக்கம் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளாகும்.

இங்கு 408 கிலோ மீற்றர் அளவிளான மின் வேலிகள் அமைக்கப்படல் வேண்டும். அதில் 147 கிலோ மீற்றர் அளவான மின் வேலிகளே அமைக்கப்பட்டுள்ளன.

இன்னும் 261 கிலோ மீற்றர் அளவான மின் வேலிகள் அமைக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY