சர்வதேச கூட்டுறவு தின விழாவை மட்டக்களப்பில் நடாத்த தீர்மானம்; ஜனாதிபதி பிரதம விருந்தினராக கலந்து கொள்வார்

0
380

(விஷேட நிருபர்)

இவ்வாண்டுக்கான சர்வதேச கூட்டுறவு தின விழா எதிர் வரும் ஜுலை மாதம் 7ம் திகதி மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் எம்.சி.எம்.சரீப் தெரிவித்தார்.

இந்த விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனா பிரமத விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வர்த்தக வாணிப கைத்தொழில் மற்றும் கூட்டுறவு அமைச்சர் றிசாட் பதியுதீனின் முயற்சியினாலும் அவரின் வழிகாட்டலிலும் சர்வதேச கூட்டுறவு தின விழா இம் முறை கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

இந்த விழா தொடர்பாக ஆராயும் ஆரம்பக் கூட்டமொன்று மட்டக்களப்பில் நேற்று நடைபெற்றது.

வர்த்தக வாணிப கைத்தொழில் மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயலாளர் ஜே.எம்.எஸ்.ஜெயசிங்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் எஸ்.எம்.நசீர், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் எம்.சி.எம்.சரீப் உட்பட மாகாண பிராந்திய கூட்டுறவு ஆணையாளர்கள், மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்கள் பல கூட்டுறவுச்சங்கங்களின் தலைவர்கள், கூட்டுற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் சர்வதேச கூட்டுறவு தின விழாவை மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டதுடன் இந்த விழாவில் கிழக்கு மாகாணத்திலிருந்து 3000 கூட்டுறவாளர்களும் ஏனைய மாகாணங்களில் இருந்து 2000 கூட்டுறவாளர்களுமாக 5000 கூட்டுறவாளர்களை கலந்து கொள்ளச் செய்வதெனவும் தீர்மானிக்;கப்பட்டது.

அத்துடன் சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறந்த கூட்டுறவுச்சங்கங்களை தெரிவு செய்தல், சிறந்த கிராமிய கூட்டுறவு அபிவிருத்தி வங்கிகளை தெரிவு செய்தல், சிறந்த கூட்டுறவு எரிபொருள் நிரப்பும் நிலையங்களை தெரிவு செய்தல், சிறந்த நுகர்வோர் பிரிவை தெரிவு செய்தல் கூட்டுறவு அழகன், கூட்டுறவு அழகி கூட்டுறவு நட்சத்திர பாடகர் போன்றோரை தெரிவு செய்வதற்கான போட்டிகளையும் நடாத்துவதென இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று தேசிய ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி கட்டுரை, சிறுகதை உட்பட கூடைபந்து வலைப்பந்து போன்ற போட்டிகளை நடாத்த தீர்மானித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் எம்.சி.எம்.சரீப் தெரிவித்தார்.

LEAVE A REPLY