ஒரு சமூகத்தை ஓரம் கட்டி விட்டு இன்னொரு சமூகத்தை கட்டி எழுப்ப முடியாது

0
194

“விடியும் வேளை” நேரடி ஒலி பரப்பில் பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானா தெரிவிப்பு

WhatsApp Image 2018-05-21 at 12.30.00(முகம்மட் அஸ்மி)

நல்லிணக்கம் எனும் அடிப்படையில் அரசின் சேவைகளை அனைவரும் சமத்துவமாகவும் சமனாகவும் அடையக்கூடிய வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதோடு, ஒரு சமூகத்தை ஓரங்கட்டி விட்டு இன்னொரு சமூகத்தை ஒரு போதும் கட்டி எழுப்ப முடியாது, கடந்த காலங்களில் இந்த சமத்துவம் அற்ற நிலையினால் தான் நாட்டிலே பிரச்சனைகள் தோற்றம் பெற்றது, ஆகவே எங்கும் சமத்துவம் பேணப்படல் வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானா தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை காலை இலங்கை ஒலி பரப்பு கூட்டுத்தாபனத்தின் “விடியும் வேளை” நிழ்ச்சியில் கலந்து கொண்டு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்படி தெரிவித்தார்.

குறித்த நேர்காணலில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், இலங்கை ஒரு பல்லின நாடு என்ற அடிப்படையில் அனைத்து மக்களையும் ஒன்றினைத்து அவர்களின் கலை கலாச்சாரம் என்பவற்றை மதித்தவர்களாக – தேவைகளை புரிந்தவர்களாக, அவர்களின் அபிலாஷைகளை அடையாளம் கண்டு நிறைவேற்றக் கூடியதாக எங்களின் அமைச்சு தொழிற்படும் என்றார்.

மேலும் மொழி அமுலாக்கம் தொடர்பான பிரச்சனைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டிலே மும்மொழிகளிலும் அரச கருமங்கள் ஆற்றப்பட வேண்டும் என்று இதுவரை 25 இற்கும் மேற்பட்ட சுற்றுநிரூபங்கள் அரசாங்க திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், நேரடியாக திணைக்களங்கள் ஊடாக மொழி அமுலாக்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 18/2009 எனும் விஷேட சுற்றறிக்கையும் கொடுக்கப்பட்டது. ஆயினும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் சிரமமே உள்ளது, இவற்றை நீக்கி மும்மொழி அமுலாக்கத்தை வினைத்திறன் மிக்கதாக்கும் பொருட்டு பல்வேறு முயற்சிகளை அமைச்சு முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில் சாதாரண தரப்பரீட்சையில் தாய் மொழியிலும் இரண்டாம் மொழியிலும் சித்தியடைந்த அடிப்படை தகைமைகளை பூர்த்தி செய்த 600 இற்கும் அதிகமான இளைஞர் யுவதிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு 6மாதங்கள் பயிற்சியை வழங்கி அரசாங்க திணைக்களங்களில் அவர்களை நியமித்து, அங்கு மக்கள் எதிர்கொள்ளும் மொழிப் பிரச்சனைகளை தீர்த்து மொழி சமத்துவத்தை பேண நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றதுடன், குறித்த பதவிகளுக்கான தகைமைகளை கொண்ட இளைஞர் யுவதிகள் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்துள்ள விளம்பரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்க முடியும் என்றார்.

அத்துடன் எமது அமைச்சின் ஊடாக பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புக்களையும் ஒன்றிணைத்து நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக செயற்பட இருப்பதாகவும், அதற்காக மக்கள் பிரதிநிதிகள், புதிய உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் என அத்தனை தரப்புக்களையும் உள்வாங்கி நல்லிணக்க அடிப்படையில் அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என குறித்த நேர்காணலில் பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானா மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY