போதைவஸ்து பாவனை சமூதாயத்தை நாசமாக்குகிறது: கலாசார உத்தியோகத்தர் ஏ.எல். பீர் முகம்மட் காசிமி

0
243

(எச்.எம்.எம்.பர்ஸான்)

போதைவஸ்து பாவனை, போதைவஸ்து கடத்தல், போதைவஸ்து விற்பனை ஆகியவைகள் சமூதாயத்தையும் எதிர்கால தலைமுறையையும் அழித்து நாசமாக்குகின்ற மிகப் பயங்கரமான குற்றச்செயல்களாகும் என கல்குடா ஜம்இயது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவரும் கலாசார உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி தெரிவித்தார்.

ஓட்டமாவடி – பதுரியா நகரில் புதிதாக அமையப்பெற்ற பள்ளிவாசல் அண்மையில் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது இத் திறப்புவிழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

சமூதாயத்தில் நாங்கள் போதைவஸ்தைப் பற்றிப் பேசினால் அதனை விற்பனை செய்கின்றவர்களும், போதைவஸ்தைப் பாவிக்கின்றவர்களும் எங்களை எதிர்ப்பார்கள்தான் அதற்காகவேண்டி மார்க்கத்தை சொல்லாமல் இருக்கமுடியாது.
போதைவஸ்து குற்றச்செயல்களில் இருந்து சிலர் கைது செய்யப்பட்டால் இதற்கெல்லாம் காரணம் உலமாக்கள்தான் என்று பலர் பேசித் திரிவதை காணமுடிகிறது. தீமையொன்று ஒழிவதற்கும், தீமைகளோடு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதற்கும் உலமாக்கள் காரணமாக இருந்தார்களென்றால் அந்தப் பொறுப்பை நாங்கள் மனமுவந்து ஏற்றுக்கொள்கின்றோம்.

உலமாக்கள் போதைவஸ்து பாவனைக்கு துணை போகவில்லை, போதைவஸ்து பாவனையாளர்களுக்கு ஆதரவு வழங்கவில்லை இத் தீமையான விடயத்துக்கு அவர்கள் என்றும் குரல்கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள் சமூதாயத்தை கெடுத்து குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கின்ற யாராக இருந்தாலும் தண்டனையை கட்டாயம் அனுபவித்தே ஆகவேண்டும் போதைவஸ்து கடத்தல், போதைவஸ்து விற்பனை இவைகளெல்லாம் சமூதாயத்தின் மிகப்பெரிய குற்றச் செயல்களாகும் இதையெல்லாம் தைரியமாகவும், பகிரங்கமாகவும், சந்திக்குச்சந்தி மேடை போட்டு மக்களுக்கு தெளிவூட்டுவது இஸ்லாமிய ஏகத்துவப் பிரச்சாரப் கடமைகளில் ஒன்றாகும்.

எனவே எங்களை எதிக்கின்றார்கள், தூற்றுகிறார்கள் என்பதற்காக நாங்கள் மார்கத்தை சொல்லாமல் இருக்க முடியாது இத் தீமையான காரணம் நம் சமூகத்திலிருந்து இல்லாமல் போவதற்கு தயவுதாட்சனையின்றி நாங்கள் உரத்துக் கூறிக்கொண்டேயிருப்போம் எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY