காத்தான்குடி-1, மீரா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்துக்காக தேர்தல் மூலம் 21 பேர் தெரிவு

0
242

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தைத் தெரிவுசெய்யும் நோக்கில், நேற்று (13) நடத்தப்பட்ட தேர்தலில், அந்தப் பள்ளிவாசல் நிர்வாகத்துக்கான 21 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனரென, முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்தியக் காரியாலயம் அறிவித்துள்ளது.

மேற்படி பள்ளிவாசலில், காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை, முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய காரியாலய அதிகாரிகள், பொலிஸார், உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பிரசன்னத்துடன் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

நிர்வாகத்துக்குத் தெரிவுசெய்யப்பட வேண்டிய 21 பேருக்காக, 55 பேர் போட்டியிட்ட நிலையில், தகுதியான 1,729 (ஜமாஅத்தார்) வாக்காளர்களில் 289 பேர் வாக்களித்திருந்தனர். அவர்களில் 14 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

தெரிவுசெய்யப்பட்ட 21 நிர்வாகிகளிலிருந்து தலைவர், உப தலைவர், செயலாளர், உப செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோரின் தெரிவு, அடுத்த ஒரு சில நாட்களில் இடம்பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வழமையாக, பாரம்பரிய முறைப்படி நிர்வாகத்தினர் கூடி, புதிய நிர்வாகத்தைப் பிரேரித்து ஆமோதிக்கும் முறை அல்லது ஏகோபித்த அல்லது பெரும்பான்மை ஆதரவின்படி தெரிவுசெய்யும் வழிமுறை பின்பற்றப்பட்டு வந்தபோதும் இம்முறை தேர்தல் மூலம் நிர்வாகத்தினர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY