கொழும்பில் நாளை பலஸ்தீன ‘நக்பா’ தின நிகழ்வுகள்

0
106

பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான இலங்கை குழுவும் கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பலஸ்தீன மக்களின் வெளியேற்றத்தைக் குறிக்கும் “நக்பா” தின நிகழ்வுகள் நாளை (14) திங்கட் கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளன.

நக்பா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முச்சக்கர வண்டிப் பேரணி நாளை காலை 9 மணிக்கு கொழும்பு 7 விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பலஸ்தீன தூதரக வளாகத்திலிருந்து ஆரம்பமாகிறது. இப் பேரணியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆரம்பித்து வைக்கவுள்ளார். குறித்த பேரணி காலி முகத்திடல் வழியாகச் சென்று மீண்டும் பலஸ்தீன தூதரகத்தை வந்தடையவுள்ளது.

இதேவேளை, நக்பா தினத்தைக் குறிக்கும் விசேட நிகழ்வு நாளை மாலை 4 மணிக்கு கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொள்வதுடன் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சிறப்புரையாற்றவுள்ளார். இந் நிகழ்வில் மத தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், இராஜதந்திரிகள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளதுடன் இதன்போது பலஸ்தீன மக்களின் அவலங்களை சித்திரிக்கும் புகைப்படக் கண்காட்சியும் இடம்பெறவுள்ளது.

மேலும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கையொப்பம் சேகரிக்கும் மற்றொரும் நிகழ்வும் நாளை முதல் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆரம்பித்து வைக்கவுள்ளார். நாளை திங்கட் கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படும் இந் நிகழ்வு 16 ஆம் திகதி வரை காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு தொடரும் என பலஸ்தீன தூதரகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY