தாய் என்ற பொய்காரி

0
448

(Mohamed Nizous)

எத்தனை பொய்களும்மா
எனக்காக நீ சொன்னாய்
பெத்த புள்ள வாழ்வதற்காய்
சுத்தமாகச் சொன்ன பொய்கள்
அத்தனை பொய்களினதும்
அர்த்தம் இப்ப புரியுதும்மா

அடிப்பிடித்து தீஞ்சதுதான்
அடி எனக்குப் பிடிக்குமென்று
சோறு தீஞ்ச நாளெல்லாம்
சொன்ன உன் பொய் வார்த்தை
நல்லா இப்ப புரியுதும்மா
நானும் தாய் ஆன பின்னால்.

ஆக்கிய பிடிச் சோற்றை
அப்படியே தந்து விட்டு
பசிக்கவில்லை என்று சொல்லி
பச்சத் தண்ணி குடிச்ச உந்தன்
பொய் இப்ப புரியுதம்மா
புள்ள எனக்கும் பொறந்த பின்னால்

பெரு நாள் கொண்டாட
பிள்ள இத உடு என்று
புதுச் சட்டை தந்த போது
புன்னகைத்து நான் கேட்டேன்
காதில போடுறத
காணல்லயே எங்க உம்மா?
போட்டா நோகுதென்று
நேற்று கழற்றி வெச்சேன்
என்று நீ சொன்ன பொய்
இப்ப விளங்குதம்மா
தோடு சட்டையாகிய
துயரம் புரியுதும்மா

காக்கி உடை உடுத்த
கறுப்பு மாமா வயிறு காட்டி
ஆட்களை முழுசாக
அப்படியே விழுங்குவாரு
ஒழுங்காச் சாப்பிடாட்டி
உன்னையும் கொடுப்பேன் என
பூச்சாண்டி நீ காட்டி
பொய் சொன்ன காரணங்கள்
இப்ப புரியுதும்மா
அப்பாவி அந்தக் காக்கி.

உன் பொய் அறியாது
உன்னிடமே பொய் சொல்லி
மாங்கா திருடி உண்டு
மாட்டி நின்ற போது
பொய் ஏன் நீ சொன்னாயென
போட்டு அடித்தாயே
அந்த அடியும் பொய்யென்று
அப்புறம் புரிந்து கொண்டேன்
ஈர்க்கிலில்லா ஓலையால்
எனக்கு அடித்திருந்தாய்

உன்னைப் போல்
என்னைப் போல்
புள்ளைக்காய்ப்
பொய் சொல்லும்
அன்னைகள் இம் மண்ணில்
ஆயிரக் கணக்கிலே
வாயக் கட்டி
வயிற்றக் கட்டி
வாழ்கிறார்கள் பிள்ளைகளுக்காய்
அந்த அன்னையர்க்கு
ஆண்டவன் அருளட்டும்

LEAVE A REPLY