லிபியா தேர்தல் ஆணையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் – 11 பேர் பலி

0
118

லிபியாவில் அதிபர் முகமது கடாபி கடந்த 2011-ம் ஆண்டு நடந்த கிளர்ச்சியாளர்களின் வன்முறை தாக்குதலில் கொல்லப்பட்டார். அதன்பின், அங்கு வன்முறை சம்பவங்களால் நாடு சீர்குலைந்து போனது.

கடாபியின் ஆட்சியில் தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அவரது மரணத்திற்கு பின்னர் 2012-ம் ஆண்டில் தேர்தல் நடைமுறை உருவானது. அங்கு நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் சுயாட்சி தன்மையுடன் செயல்படக் கூடிய அமைப்புகளில் ஒன்றாக தேர்தல் ஆணையமும் உள்ளது.

இந்நிலையில், லிபியாவில் உள்ள தேர்தல் ஆணையத்தின் மீது இன்று பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 11 பேர் உடல் சிதறி பலியாகினர்.

லிபியாவின் டிரிபோலி நகரில் தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. இன்று சில பயங்கரவாதிகள் அங்கு சென்றனர். அவர்கள் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். மேலும், தங்கள் உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதனால் அப்பகுதியே கரும்புகை மண்டலமாக காணப்பட்டது.

இந்த தாக்குதலில் 11 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும், 2 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY