காத்தான்குடி நகரசபையை விட்டு வெளிநடுப்பு செய்தமைக்கான காரணத்தினை விபரித்தார் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

0
196

(எம்.ரீ. ஹைதர் அலி)

சபை நடவடிக்கைகள் நிகழ்ச்சி நிரலுக்கமைய உரிய முறையில் இடம்பெறாமையே தான் சபையிலிருந்து வெளியேறியமைக்கான காரணம் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகரசபையின் உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி வியாழக்கிழமையன்று விஷேட அமர்வாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த காத்தான்குடி நகர சபையின் 2வது அமர்வின் போது முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபையின் உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இடைநடுவில் சபை அமர்வில் இருந்து வெளியேறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கையின் போது இடைநடுவில் வெளியேறியமையினை கண்டித்து பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களுக்கெதிராக சபை முதல்வர் SHM. அஸ்பர் அவர்களால் கண்டனத் தீர்மானம் ஒன்று சபையில் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் நோக்கில் நேற்று (28.04.2018) இரவு உடகவியலாளர் மாநாடொன்றினை ஒழுங்குசெய்து உரையாற்றிய போதே காத்தான்குடி நகரசபையின் உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்

குறித்த நகரபையின் இராண்டாம் அமர்வின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக நகரசபை நிதியூடாக செலவீனங்களை மேற்கொள்வதற்கு அனுமதி வேண்டி தவிசாளர் அவர்களினால் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.

குறித்த விடயங்களுக்குரிய செலவீனங்கள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களினூடாக மதிப்பீடு செய்யப்பட்டு, அவ்விடயம் தொடர்பாக முழுமையாக ஆராயப்பட்ட பின்னரே அவைகளை சபையில் பிரேரித்து அனுமதி பெற வேண்டும் என்பதனையும், உள்ளடக்கப்பட்ட விடயங்களில் வெளிப்படைத்தன்மையற்று காணப்படுவதோடு சபை நிகழ்ச்சி நிரலில் குறைபாடு உள்ளதனையும் நாங்கள் தவிசாளருக்கு சுட்டிக்காட்டியிருந்தோம்.

நகர சபை அமர்வொன்றின் போது வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் பிழை இருக்குமாயின் சபை நடவடிக்கைகள் ரத்துச் செய்யப்படுதல் அல்லது புதிய நிகழ்ச்சி நிரல் ஒன்று தயாரிக்கப்பட்டு அவ் நிகழ்ச்சி நிரலுக்கு சபை அனுமதியினை பெறப்பட்ட பின்னரே சபை நடவடிக்கையினை ஆரம்பித்தல் வேண்டும்.

இருப்பினும் நிகழ்ச்சி நிரலில் பிழை இருப்பதனை ஒப்புக்கொண்ட தவிசாளர் அவர்கள் வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரலினை தான் பார்க்கவில்லை என்றும் கூறி தொடர்ந்து சபை நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார். இதனையடுத்தே நான் சபையிலிருந்து வெளியேறியிருந்தேன்.

மேலும் சபை நடவடிக்கையின் போது உறுப்பினர் ஒருவர் இடைநடுவில் வெளியேறுவதற்கு தவிசாளரின் அனுமதியினையோ அல்லது சபையின் அனுமதியினையோ பெற வேண்டிய எத்ததைய தேவைப்பாடுகளும் கிடையாது.

சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய ஆகக்குறைந்த உறுப்பினர்கள் பங்குபற்றும் சந்தர்ப்பங்களில் உறுப்பினர் ஒருவர் இடைநடுவில் வெளியேறும் சந்தர்பத்திலேயே மீதமுள்ள உறுப்பினர்களை கொண்டு சபை நடவடிக்கைகளை தொடர முடியாது என்ற காரணத்தினால் சபை தவிசாளர் அவர்களால் குறித்த உறுப்பினரை தொடர்ந்து சபை நடவடிக்கைகளில் பங்குகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்க முடியும்.

இருப்பினும் அத்தகைய சந்தர்ப்பத்தில் கூட சபையிலிருந்து வெளியேறுவதற்கு உறுப்பினருக்கு பூரண உரிமை உள்ளதோடு, தவிசாளர் அவர்களால் வலுக்கட்டாயமாக உறுப்பினர்களை சபையிலிருந்து வெளியேறாமல் தடுப்பதற்குரிய எத்தகைய அதிகாரங்களும் கிடையாது. எனவே இனிவரும் காலங்களிலாவது தவிசாளர் அவர்கள் இவ்வாறான விடயங்களை நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும்.

மேலும் ஊழலற்ற முறையில் நகர ஆட்சியினை மேற்கொள்வது தொடர்பாகவும், மக்களினுடைய பொதுப் பணத்தினை சிறிதும் வீணடித்துவிடாமல் தமது கடமைகளை உரிய முறையில் முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் உறுதியான பல்வேறு கருத்துக்கள் ஆளும் கட்சி உறுப்பினர்களால் சபையில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இருப்பினும் கடந்த காலங்களில் மட்டக்கப்பு பிராந்திய மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் 197500 ரூபாய் மாத வாடகைக்கு விடப்பட வேண்டும் என்று மதிப்பீடு செய்யப்பட்ட நகரசபைக் கட்டிடம் வெறும் 5000 ரூபாய் மாத வாடகைக்கு பல்கலைக்கழகக் கல்லூரிக்கு குத்தகை வழங்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக காத்தான்குடி நகரசபைக்கு சுமார் 68 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகையினை பல்கலைக்கழகக் கல்லூரி வழங்க வேண்டியுள்ளது.

இப்பணமானது எமது நகர சபையூடாக எமது பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் ஏனைய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய மக்களினுடைய பொதுப் பணமாகும்.

எனவே இத்தொகையினை குறித்த கல்லூரியினை நிர்வகிக்கும் ஹிரா பௌண்டேசன் அமைப்பின் தலைவரிடம் இருந்து வசூலித்து நகர சபைக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை காத்தான்குடி நகர சபையின் தவிசார் உள்ளிட்ட ஏனைய ஆளும் கட்சி உறுப்பினர்கள் முன்னெடுக்கும் பட்சத்தில் அது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாக அமையும் என்பதோடு நகர சபையில் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு விடயங்களும் மக்களுக்கு மிகவும் வெளிப்படைத்தன்மையோடு இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY