கற்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட பொதிகளில் மோசடி: கடை உரிமையாளருக்கு சட்ட நடவடிக்கை

0
183

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் கற்பினி தாய்மார்களுக்கு வழங்கப்படுகின்ற பொதிகளில் மோசடி செய்த கடை உரிமையாளருக்கு எதிராக இன்று (24) வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் தெரிவித்தார்.

மூதூர் பிரதேச செயலகத்தினால் கற்பிணி தாய்மார்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான உணவு முத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் அம்முத்திரைகளுக்கு பெறுமதியான பொருற்களை கொள்வனவு செய்வதற்கு கடையொன்றிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரண்டாயிரம் ரூபாய் பெறுமதிக்கு பதிலாக அக்கடையில் பொருற்கள் குறைவாக வழங்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட கற்பிணித்தாய்மார்கள் முறைப்பாடு செய்தனர்.

இம்முறைப்பாட்டையடுத்து நுகர்வோர் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் கற்பிணி தாய்மார்களுக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு பதிலாக 1544 ரூபாய் பெறுமதியான பொருற்கள் விநியோகம் செய்யபட்டு வருவது தெரியவந்துள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபையினர் தெரிவித்தனர்.

கடந்த மூன்று மாதங்களாக இம்மோசடி இடம் பெற்று வந்துள்ளதாகவும் மூதூர் பிரதேசத்தில் 1250 கற்பிணிகளுக்கு உணவு பொதிகளுக்குறிய முத்திரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த விநியோகம் செய்த கடைக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை இடை நிறுத்தி அக்கடை உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் தெரிவித்தார்.

அத்துடன் இனிவரும் காலங்களில் கற்பிணித்தாய்மார்கள் தங்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு முத்திரைகளின் பின் பக்கத்தில் வழங்கப்பட வேண்டிய பொருற்களின் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பொருற்களில் தமக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறும் முத்திரை தொடர்பாக கூடிய அவதானத்துடன் செயற்படுமாறும் திருகோணமலை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY