ஐ.தே.கவின் பட்டியலை மைத்திரி நிராகரித்தார்!

0
249

அமைச்சரவை மறுசீரமைப்பின்போது தமது கட்சிக்கு என்னென்ன அமைச்சுகள் வேண்டுமெனக் கோரி ஐக்கிய தேசியக் கட்சியால் முதலில் முன்வைக்கப்பட்ட பட்டியல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் அமைச்சரவையில் முழுமையானதொரு மறுசீரமைப்பை செய்வதற்கு ஜனாதிபதி உத்தேசித்திருந்தாலும், அமைச்சுகளுக்கான துறைஒதுக்கீடு அறிவியல்பூர்வமாக இடம்பெறவேண்டும் என்பதற்காக அதை தற்காலிகமாக ஜனாதிபதி ஒத்திவைத்தார்.

அத்துடன், அமைச்சர்களின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பில் மதிப்பீடுசெய்து, யார் யாருக்கு எத்தகைய அமைச்சுகள் வழங்கப்படவேண்டும் என்பது குறித்து அறிக்கையொன்றை வழங்குமாறு தனது செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார். அவர், ஐக்கிய தேசியக் கட்சி தரப்பிலிருந்தும் மாதிரி பட்டியலொன்றை கேட்டிருந்தார்.

இதன்பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சியால் வழங்கப்பட்ட முதல்பட்டியலே நிராகரிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் சமுர்த்தி அமைச்சுகளை ஐ.தே.க. கோரியிருந்ததுடன், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தது.

லண்டனில் இருந்தவாறே மேற்படி கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளாரென அறியமுடிகின்றது. இதன்பின்னர் மீண்டுமொரு பட்டியலை ஐ.தே.க. கையளித்தது என்றும், அதற்கு ஜனாதிபதித் தரப்பு இணக்கம் வெளியிட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது

LEAVE A REPLY