இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஒரு பகிரங்க மடல்

0
553

அஸ்ஸலாமு அலைக்கும்.

தாங்கள் கடந்த 1989ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டது முதல், இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கின்ற இது கால வரைக்கும் காத்தான்குடியிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலுமுள்ள தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் பல வற்றிற்கும் தங்களால் முடியுமான பல உதவிகளை செய்து வருகின்றீர்கள்.

இதில் குறிப்பாக காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள பல பாடசாலைகளில் காணப்படுகின்ற கட்டிடங்கள் பௌதீக அபிவிருத்திகள் என்பன தங்களின் நிதியொதுக்கீட்டிலேயே நிர்மானிக்கப்பட்டன.

இதில் இன்னும் சில அரசியல் பிரமுகர்களின் உதவிகள் இருந்தாலும் அதிகமான அபிவிருத்திப் பணிகளை செய்த பெருமை உங்களையே சாரும்.
இந் நிலையில் காத்தான்குடி மத்திய மகா

வித்தியாலய தேசியப் பாடசாலையில் தற்போது காணப்படுகின்ற ஓங்கி உயர்ந்த கட்டிடங்களில் ஓரிரு பழய கட்டிடங்களை தவிர இங்கு காணப்படும் ஏனைய அனைத்து கட்டிடங்களையும் நீங்களே நிர்மானித்தீர்கள்.

விஞ்ஞான கட்டிட தொகுதி, புதிய விடுதிக் கட்டிடம் உட்பட பல கட்டிடங்களை நிர்மானிக்கவும் நீங்கள் காரணமாக இருந்தீர்கள். அது மாத்திரமின்றி ஒரு பாரிய ஒன்று கூடல் மண்டபமும் உங்கள் முயற்சியினால் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையின் பௌதீக வளத்தினை ஏற்படுத்த நீங்கள் எடுத்த நடவடிக்கையும் கரிசனையும் இங்குள்ள நிர்வாக கட்டமைப்புக்களை சீரமைப்பதில் அல்லது ஒழுங்குபடுத்துவதில் காட்டவில்லை என்பது என்னைப் போன்ற பலரின் கருத்தாகும்.

இந்த பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய அதிபர் முபாறக் கடந்த 2015 டிசம்பர் மாதம் ஓய்வு பெற்று சென்றதையடுத்து இப்பாடசாலையின் பதில்; அதிபராக எஸ்.எச்.பிர்தௌஸ் அப் பாடசாலையை பொறுப்பேற்று செய்து வருகின்றார்.

அவரும் அவரோடு பிரதி அதிபர்களும் முடியுமானளவு இப் பாடசாலையினை செய்து வருகின்றனர்.

இவர்களின் சேவையை அல்லது அவர்களின் கடமையை குறைத்து மதிப்பிட வேண்டிய அல்லது பலவீனமாக பார்க்க வேண்டிய அவசியமில்லை.

அவர்களும் இப்பாடசாலக்கான தகுதியான புதிய அதிபர் ஒருவரை கொண்டு வரவேண்டும் என்றே விரும்புகின்றார்கள்.

புதிய அதிபர் ஒருவரை கொண்டு வரவேண்டும் என்பதை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் நடாத்திய கல்வி எழுச்சி மாநாட்டின் போது தற்போதைய அதிபர் பிர்தௌஸ் வலியுறுத்திக் கூறினார்.

இந்த நிலையில் கடந்த 3 வருடங்களாக இந்தப் பாடசாலைக்கு ஒரு தகுதியான அதிபர் இல்லாத ஒரு நிலை இருந்து வருகின்றது.

இதனால் இப்பாடசாலையின் வளர்ச்சியில் அல்லது பாடசாலையின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பல சவால்கள் இருப்பதை காணமுடிகின்றது.

ஆண் மாணவர்களின் கல்வி வளர்ச்சி என்பது வீழ்ச்சியடைந்து செல்லும் இன்றைய நிலையில் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையினை முன்னேற்ற வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு காத்தான்குடியிலிருக்கின்ற
அனைவருக்குமுள்ள ஒரு மிக முக்கியமான பொறுப்பாகும்.

தாங்கள் இப் பாடசாலையில் கல்வி கற்றவர் என்ற வகையிலும் இந்த காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்ற வகையிலும் அமைச்சர் என்ற உயர்ந்த அரசியல் பதவியில் இருக்கின்றவர் என்ற வகையிலும் இந்த பாடசாலையின் அதிபர் ஒருவரை கொண்டு வருதல் இப் பாடசாலையிலுள்ள நிர்வாக கட்டமைப்புக்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தல் போன்ற விடயங்களில் தாங்கள் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

காத்தான்குடியின் ஒரு சில பாடசாலைகளிலுள்ள நிர்வாகத்துடன் மாத்திரம் தான் உங்கள் தொடர்பு இருப்பதாகவும் அப் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சியிலேயே தாங்கள் அதிக ஆர்வம் செலுத்துவதாகவும் சிலர் கூறுகின்றனர்.

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையின் நிர்வாக கட்டமைப்புக்களில் தாங்கள் சில மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்தால் அது அரசியல் ரீதியாக பழிவாங்கல் என சிலர் விமர்சிப்பார்கள் எனக் கூறி இப் பாடசாலையின் நிர்வாக விடயங்களில் தாங்கள் தலையிடுவதை தவிர்த்துக் கொண்டதாகவும் எனக்கு தெரிய வருகின்றது.

இப் பாசடாலையின் அதிபர் விடயம் மற்றும் சில நிர்வாக கட்டமைப்புக்களில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக தங்களுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காத்தான்குடி கடற்கரையில் நடைபெற்ற ஹைறாத் வித்தியாலயத்தின் சிறுவர் தின விழாவின் போது நானும் ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா அவர்களும் உரையாடிய வேளை இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் சில மாற்றங்களை அப்பாடசாலையில் கொண்டு வருவேன் எனக் கூறினீர்கள்.

எனினும் அதன் பின்னர் தங்களுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் அதன் பின்னர் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இவைகளினால் இந்த விடயங்களை உங்களுக்கு செய்யாமல் போயிருக்கலாம்.

எனவே தற்போது உள்ள நிலையில் இந்த பாடசாலைக்கு ஒரு தகுதியான ஒரு அதிபரை கொண்டு வருதல் மற்றும் நிருவாக கட்டமைப்புக்களில் மாற்றத்தை ஏற்படுத்துதல் அந்தப் பாடசாலையின் கல்வி மேம்பாட்டில் உங்களது வீச்சை அல்லது பார்வையை அதிகமாக்குங்கள் என இந்த பகிரங்க கடிதத்தின் மூலம் நான் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

அத்தோடு இந்தப்பாடசாலையினைப் பொறுத்த வரைக்கும் இன்னும் பல உட்கட்டமைப்பு தேவைகளும் காணப்படுகின்றது. அவைகளிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது.

இந்த விடயங்களிலும் கவனம் செலுத்துமாறு உங்களை நான் தாழ்மையாக கேட்டுக் கொள்கின்றேன்.

நமது ஊரின் கண்ணாக திகழ்கின்ற இந்த தேசியப் பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் நாம் எல்லோரும் அக்கறை கொள்ள வேண்டிய கட்டாயமும் அவசியமும் ஏற்பட்டுள்ளதை தாங்கள் உணர்வீர்கள் என நிகைகின்றேன்.

இதற்காக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்ளேமனம் மற்றும் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை உட்பட சமூக நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களும் இப் பாடசாலை தொடர்பில் நீங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு கிடைக்குமென நினைக்கின்றேன்.

நமது தூய பணிகளை அல்லாஹ் அங்கீகரிப்பானாக!

நன்றி

எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஊடகவியலாளர்
காத்தான்குடி
14.4.2018

LEAVE A REPLY