ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவது நிறுத்தப்படவேண்டும்-தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர்

0
243

(எம்.ஏ.எம் முர்ஷித்)

“தங்களது அரசியல் அந்திமத்தை உணர்ந்த சில வங்குரோத்து அரசியல்வாதிகள் தமது வக்கிரத்தனங்களை தங்கள் அரசியல் இருப்பிற்கே ஆதாரமாகவும் ஆதரவாகவுமிருந்த ஊடகவியலாளர்கள் மீதே காட்டத்தொடங்கியுள்ளமை மிகுந்த கவலையளிக்கிறது” என நிந்தவூர் பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் எம். ஏ.எம் தாஹிர் தெரிவித்தார்.

சமீபகாலமாக கருத்துச்சுதந்திரத்தினை மையமாகக்கொண்டு இயங்குகின்ற ஊடகவியலாளர்கள் மீது சனநாயகத்தையே அச்சுறுத்தும் வகையில் தொடர்ச்சியாக குறித்த ஒரு கட்சியின் தலைமையாலும் அக்கட்சியின் பிரமுகர்களாலும் அச்சுறுத்தப்படுவதும், அடிபணிய வைக்க முனைவதும் மட்டுமல்லாமல் சேறு பூசுவதும் வகையில் அவர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவது போன்ற ஈனச்செயல்களுக்கு சனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவன் என்ற வகையில் கண்டனம் தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.

அண்மையில் தொலைக்காட்சி அறிவிப்பாளரும் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான முஷாரப் அவர்களின் நிகழ்ச்சிகள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அட்டாளைச்சேனையைச்சேர்ந்த ஊடகவியலாளர் அரூஸ் அவர்கள் மீதான தாக்குதல் போன்ற அத்துமீறல் சம்பவங்களைத் தொடர்ந்தே இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களான நிப்ராஸ், மப்ரூக் உட்பட இன்னும் சில ஊடகவியலாளர்களுக்கு எதிராக குறிப்பிட்ட கட்சியின் தலைமை செயற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்,

கட்சியினதும் தலைமையினதும் பிழைகளை சுட்டிக்காட்டுகின்றபோது அதனை ஏற்றுக்கொள்ளாது ஊடகவியலாளர்களுக்கு எதிராக செயற்படுவது வங்குரோத்து அரசியல் மாத்திரமன்றி சர்வதிகாரப் போக்கையும் காட்டுகிறது.

மர்சூம் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்களால் கட்சி தொடங்கப்பட்ட போது ஊடகவியலாளர்களைத் துணையாகக்கொண்டே கட்சியை வளர்த்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு சமூகத்தில் இருக்கின்ற ஊடகவியலாளர்களும் அரசியல் வாதிகளும் முரண்பட்டுக் கொள்கின்றபோது சமூகத்திற்கு பாரிய இழப்புகள் ஏற்படும்.

தலைவர்கள் என்போர் தாங்கள் சொல்வதை அல்லது தாங்கள் சொல்வதை மட்டுந்தான் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற மனநிலை மாறவேண்டும். தான் என்ற அகங்காரம் ஒரு சிறந்த தலைமையின் பண்பாக இருக்க முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் பல கூறுகளாக பிரிந்து முஸ்லிம்கள் மத்தியில் பல கட்சிகள் தோற்றம் பெருவதற்கு தலைமையின் சர்வதிகார அகங்காரம், விட்டுக்கொடாமை, சுயநலம், சமூக அக்கறையற்ற நிலைப்பாடு மற்றும் கொள்கையில் ஏற்பட்ட திரிவுகள் எனப் பல காரணங்கள் செல்வாக்குச் செலுத்தியதன் விளைவுதான் அக்கட்சியின் இன்றைய நிலைக்குக்காரணமாகும்.

அண்மைக் காலமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் போக்கு பல்வேறு மட்டங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவும் தெரிவித்தார்.

IMG-20180414-WA0016

LEAVE A REPLY