மட்டக்களப்பு மத்தி கல்வி அதிகாரிகள் அரசியல் கைதிகளாக இருந்து செயற்பட வேண்டிய ஒரு கால கட்டத்திற்குள் தள்ளப்பட்டார்கள்

0
200

(வாழைச்சேனை நிருபர்)

மட்டக்களப்பு மத்தி கல்வி அதிகாரிகள் அரசியல் கைதிகளாக இருந்து செயற்பட வேண்டிய ஒரு கால கட்டத்திற்குள் தள்ளப்பட்டார்கள் என கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ரெதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தின் 5ம் ஆண்டு புலமைப் பரீட்டையில் தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் 100 வீதம் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் தேசியத்தில் சாதாரண தர பரீட்சையில் மூன்று தடவை முதன்மை பெற்று வந்தது. இதற்கு காரணம் அக்காலத்தில் இருந்த கல்வியலாளர்களின் கடின உழைப்பும், வழிகாட்டல்கள் கட்சிதமாக இருந்தது.

ஆனால் காலப்போக்கில் கல்வி அதிகாரிகளுடைய நிலவரம் அரசியல் கைதிகளாக இருந்து செயற்பட வேண்டிய ஒரு கால கட்டத்திற்குள் தள்ளப்பட்டார்கள். இதனால் கல்வி நிலமை பின்தள்ளப்பட்டுள்ளது.

ரிதிதென்ன பிரதேசத்தில் பல அபிவிருத்திகளை செய்து தந்திருக்கின்றேன். இங்கு பஸ் நிலையத்தை அமைத்துள்ளேன், அத்தோடு வைத்தியசாலை, புகையிரத நிலையம் அமைந்து வழங்கியுள்ளதுடன், பாடசாலைக்கு பல அபிவிருத்திகளையும் மேற்கொண்டுள்ளேன்.

எமது பிரதேசம் கல்வியலாளர்களால் நிரம்பி வருகின்ற பிரதேசமல்ல, அப்படிப்பட்ட கல்வியாளர்கள் தங்களது கல்வி ரீதியான கருத்துக்கள், ஆலோசனைகளை எங்களிடத்தில் சொல்லப்பட வேண்டும். கடந்த காலத்தில் அரசியல் காரணங்களுக்காக அந்த நிகழ்வுகள் அதிபர், ஆசிரியர் சமூகத்தினால் தொய்ந்து விட்டு போன நிகழ்வாக கல்குடா பிரதேசத்திலும், முஸ்லிம் பிரதேசத்திலும் காணக்கூடியதாக இருக்கின்றது என்றார்.

அதிபர் எஸ்.சஹாப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓட்டமாவடி கோட்ட கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.கே.றஹ்மான், மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலக சமாதான கல்வி மற்றும் சமுக நல்லிணக்க இணைப்பாளர் எம்.ஜி.ஏ.நாசர், வாகரை பிரதேச சபை உறுப்பினர் மு.தாஹிர், ஓட்டமாவடி கோட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது 5ம் ஆண்டு புலமைப் பரீட்டையில் தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் 100 வீதம் சித்தியடைந்த மாணவர்களுக்கு அதிதிகளால் வெற்றிக் கிண்ணம் மற்றும் பதக்கம் என்பன வழங்கி வைக்கப்பட்டதுடன், கற்பித்த ஆசிரியருக்கும், பாடசாலை அதிபருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சரின் சேவையை பாராட்டி பாடசாலை சமூகத்தினரால் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY