ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு கிடைக்க வாய்ப்பிருந்தும் உறுப்பினர்களது துரோகத்தினால் கைநலுவியது

0
174

(எம்.ஜே.எம்.சஜீத்)

ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு கிடைக்க வாய்ப்பிருந்தும், அந்த சபையிலே அங்கம் வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இரு உறுப்பினர்களது துரோகத்தினால் அந்த வாய்ப்பு இல்லாமல் போனது என ஏறாவூர் பற்று பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் எம்.எஸ்.எம். ஜஃபர் தெரிவித்தார்.

ஏறாவூர் ஐயங்கேணி வட்டாரத்தில் நேற்று முன்தினம் (8) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஏறாவூர் நகர சபை தவிசாளர் தெரிவின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர், எம்.எஸ்.சுபையிரின் பெயரை முன்மொழியுமாறு, ஏறாவூர் நகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இரு உறுப்பினர்களுக்கு அக்கட்சி பணித்தும் குறித்த இரு உறுப்பினர்களும் கட்சியின் பணிப்புரையை நிராகரித்துள்ளனர்.

ஏறாவூர் நகர சபையின் முதலாவது அமர்வு (5) கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது நகர சபை தவிசாளர் தெரிவின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர், எம்.எஸ்.சுபையிரின் பெயரை முன்மொழிந்து வழிமொழியுமாறு, ஏறாவூர் நகர சபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக தெரிவான உறுப்பினர்களுக்கு கட்சியின் செயலாளரினால் பதிவுத்தபாலில் கடிதம் அனுப்பப்பட்டது.

மேற்படி கடிதத்தினை இரு உறுப்பினர்களும் பெற்றிருந்தும், கட்சியின் பணிப்புரைக்கு மாற்றமாக செயற்பட்டு, ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரை தவிசாளராக்குவதற்கு வாக்களித்துள்ளனர். குறித்த உறுப்பினர்களின் நடவடிக்கையானது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு செய்யும் பாரிய துரோகமாகும்.

ஏறாவூர் நகர சபை தேர்தலின் போது ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு மொத்தமாக 3ஆசனங்கள் கிடைத்தன. வட்டார ரீதியாக ஒரு ஆசனமும், விகிதாசார ரீதியாக 2ஆசனங்களும் கிடைத்தன. விகிதாசார ரீதியாக தெரிவான உறுப்பினர்களே கட்சியையும், கட்சியின் செயலாளரையும் அவமதித்துள்ளனர். இந்த நடவடிக்கையினால் அவர்கள் இருவரும் தங்களது உறுப்புறிமையை இழக்க நேரிடலாம்.

ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு ஏறாவூர் நகர சபைக்கு கிடைத்த 2விகிதாசார ஆசனங்களுக்கும் வட்டார ரீதியாக போட்டியிட்டு தோல்வியுற்று கூடுதலான வாக்குகளை பெற்றவர்களையே முன்னுரிமை அடிப்படையில் நியமிப்பதற்கும், அதனை சுழற்சி முறையில் பகிந்துகொள்வதற்கும் அக்கட்சியின் ஏறாவூர் மத்திய குழு தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

குறித்த தீர்மானத்திற்கினங்க இருவரது பெயர் மத்திய குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஊடாக கட்சியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குறித்த பெயர்கள் இரண்டும் பின்னர் நீக்கப்பட்டு, தேர்தலில் படுதோல்வியடைந்த ஒருவரினதும், அவரது வட்டாரத்திலே உள்ள பட்டியலிலே பெயர் குறிப்பிடப்பட்ட பெண் வேட்பாளர் ஒருவரினதும் பெயர் வர்தமானியில் வெளியிடப்பட்டது. இது ஏறாவூர் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏறாவூர் நகர சபையின் முதல் அமர்வு தினத்தின் போது தவிசாளரை பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஏறாவூர் வருகை தந்த ஜனாதிபதியின் இணைப்பாளர் ஒருவர் தவிசாளர் தெரிவின் போது முன்னாள் மாகாண அமைச்சர் சுபையிரின் பெயரை முன்மொழியுமாறு குறித்த உறுப்பினர்களிடம் வழியுறுத்தியும். அதனையும் அவர்கள் பொருட்படுத்தாது ஐக்கிய தேசிய கட்சி சார்பான ஒருவரை தவிசாளராக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

ஏறாவூர் நகர சபையினுடைய தவிசாளர் பதவி ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு கிடைக்க வாய்ப்பிருந்தும், அக்கட்சி சார்பான உறுப்பினர்கள் கட்சியினுடைய தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டதனால் இறுதியில் அது கைநலுவிப் போனது. எனவே, எது எவ்வாறாயினும் கட்சியையும், கட்சியின் செயலாளரையும் அவமதித்த உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எமது கட்சியின் ஆதரவாலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஏறாவூர் தவிசாளர் பதவிக்காக முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எஸ்.எம்.நளீம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஐ.ஏ.வாசித் அலி ஆகிய இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதனால் இருவரில் ஒருவரை தவிசாளராக தெரிவு செய்யும் பொருட்டு தெரிவுக்காக திறந்த வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

இதில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் வாசித் அலிக்கு ஆதரவாக 9வாக்குகளும், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் நளிமுக்கு 7வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதனடிப்படையில் 2மேலதிக வாக்கினால் வாசித் அலி தவிசாளராக தெரிவானார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேற்படி உறுப்பினர்கள் இருவரும் வாசித் அலிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது ஏறாவூரில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு நகர சபையின் ஆட்சியினை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கைப்பற்றும் பட்சத்தில் தன்னாலான முழுமையான உதவிகளை வழங்குவேன் என உறுதியளித்திருந்தார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY