சிறுபான்மை கட்சிகள் இணைந்து பிரதமரை மீண்டும் காப்பாற்றியுள்ளோம்: பிரதியமைச்சர் அமீர் அலி

1
248

(வாழைச்சேனை நிருபர்)

சிறுபான்மை இன மக்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை நல்லாட்சிக்கு கொண்டு வந்தனர். தற்போது சிறுபான்மை கட்சிகள் இணைந்து பிரதமரை மீண்டும் காப்பாற்றியுள்ளோம் என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஓட்டமாவடி காவத்தமுனை மற்றும் மஜீமா கிராமத்திலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (07) சனிக்கிழமை மாலை ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணையை சிறுபான்மை கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இதனை தோற்கடிப்பதில் மிகுந்த அக்கறை கொண்டது.

எனவே சிறுபான்மை இன மக்களால் கொண்டுவரப்பட்ட பிரதமரை சிறுபான்மை கட்சிகள் இணைந்து காப்பாற்றியுள்ளோம். தேசிய அரசியலிலும் பிரச்சனை உள்ளது. அரசியலில் எல்லா இடங்களிலும் பிரச்சனைகள் வரும் அதை நாங்கள் எதிர்கொள்கின்ற விதத்தில் எதிர்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் ஒரு நிலையான ஆட்சியை கொண்டு வந்து இந்த நல்லாட்சியினுடைய விடயத்தை உங்களுக்கு பகிர்ந்தளிக்கக் கூடிய எதிர்கால நிகழ்ச்சித் திட்டங்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியூதீனின் வழிகாட்டலிலே பாரிய மாற்றங்களை கிழக்கு மாகாணத்தில் மாத்திரமல்ல முழு இலங்கையிலுமே எற்படுத்தியுள்ளோம்.

கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலிலே வெறும் 43 உறுப்பினர்கள் மாத்திரம் தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது. ஆனால் தற்போது 14 மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் 168 உறுப்பினர்களை பெற்றுள்ளோம். கட்சி தற்போது பாரிய வளர்ச்சியை அடைந்திருக்கின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியையும், தலைமையையும் இந்த நாட்டில் உள்ள முஸ்லிம், தமிழ், சிங்கள மக்கள் விரும்புகின்றார்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அரசியல் மூலம் பிரதேசம் அபிவிருத்தியடைய வேண்டும் என்பதை தான் நீங்கள் அரசியலில் எதிர்பார்க்க வேண்டிய விடயம்.

நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதியமைச்சராக இருக்கின்ற காரணத்தினாலும், மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்தவன் என்ற வகையிலும் தங்களுக்கு இவ்வாறான வாழ்வாதார உதவிகளை வழங்கி வருகின்றேன் என்றார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் எம்.பி.ஜௌபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அலியார் மீராகாயிப், பிரதியமைச்சரின் இணைப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறிய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான ஜீ.பி.எஸ் உபகரணம், மேசன் உபகரணம், இடியப்பம் அவிக்கும் உபகரணம்;, கேஸ் அடுப்பு, மண் வெட்டி, மீனவர் காப்பக மேலங்கி, எண்ணெய் தெளிக்கும் கருவி, தண்ணீர் பம், கொம்பிறஸர் என்பன 198 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

03 09

1 COMMENT

  1. அமைச்சர் அவர்களே இதே பிரதமர் 1996ல் இருந்த போதுதான் கல்குடா தொகுதியில் சமைக்கச் சென்ற இருவர் வெட்டி கொல்லப்பட்டார்கள். அவர்களின் உடலைக்கூட இவரின் அரசால் பெற்றுத்தர முடியாமல் போனது. டயரில் போட்டு எரித்தார்கள். இப்போதும் இதே பிரதமரின் ஆட்சியில்தான் திகன, கண்டியில் முழு அளவிலான அழிவு நடைபெறும் வரை பார்த்திருந்து விட்டு பின்னர் பாதுகாப்பு வழங்கப்பட்டது .
    ஆனாலும் இதல்லாம் அரசியலில் சகஜம் என்று கூறுவோரும் இருக்கின்றார்கள் இதில் குளிர் காயின்றவர்களும் இருக்கின்றார்கள்.

LEAVE A REPLY