ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு துரோகமிழைத்த ரெபுபாசம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை வேண்டும்: ஸ்ரீ.சு.கட்சியின் ஏறாவூர் மத்திய குழு

0
148

(எம்.ஜே.எம்.சஜீத்)

ஏறாவூர் நகர சபை தவிசாளர் தெரிவின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர், எம்.எஸ்.சுபையிரின் பெயரை முன்மொழியுமாறு, ஏறாவூர் நகர சபை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இரு உறுப்பினர்களுக்கு அக்கட்சி பணித்தும் குறித்த இரு உறுப்பினர்களும் கட்சியின் பணிப்புரையை நிராகரித்துள்ளனர்.

ஏறாவூர் நகர சபையின் முதலாவது அமர்வு கடந்த வியாழக்கிழமை (5) கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தலைமையில் இடம்பெற்றது.

நகர சபை தவிசாளர் தெரிவின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர், எம்.எஸ்.சுபையிரின் பெயரை முன்மொழிந்து வழிமொழியுமாறு, ஏறாவூர் நகர சபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக தெரிவான ரெபுபாசம் மற்றும் பஜ்ரியா ஆகியோருக்கு கட்சியின் செயலாளரினால் பதிவுத்தபாலில் கடிதம் அனுப்பியிருப்பது தெரிய வந்துள்ளது.

மேற்படி கடிதத்தினை இரு உறுப்பினர்களும் பெற்றிருந்தும், கட்சியின் பணிப்புரைக்கு மாற்றமாக செயற்பட்டு, ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரை தவிசாளராக்குவதற்கு வாக்களித்துள்ளனர். குறித்த உறுப்பினர்களின் நடவடிக்கையானது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு செய்யும் பாரிய துரோகமாகும் என அக்கட்சியின் ஆதரவாலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏறாவூர் நகர சபை தேர்தலின் போது ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு மொத்தமாக 3ஆசனங்கள் கிடைத்தன. வட்டார ரீதியாக ஒரு ஆசனமும், விகிதாசார ரீதியாக 2ஆசனங்களும் கிடைத்தன. விகிதாசார ரீதியாக தெரிவான உறுப்பினர்களே கட்சியையும், கட்சியின் செயலாளரையும் அவமதித்துள்ளனர். இந்த நடவடிக்கையினால் அவர்கள் இருவரும் தங்களது உறுப்புறிமையை இழக்க நேரிடலாம் எனவும் கட்சியின் ஆதரவாலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு ஏறாவூர் நகர சபைக்கு கிடைத்த 2விகிதாசார ஆசனங்களுக்கும் வட்டார ரீதியாக போட்டியிட்டு தோல்வியுற்று கூடுதலான வாக்குகளை பெற்றவர்களையே முன்னுரிமை அடிப்படையில் நியமிப்பதற்கும், அதனை சுழற்சி முறையில் பகிந்துகொள்வதற்கும் அக்கட்சியின் ஏறாவூர் மத்திய குழு தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

குறித்த தீர்மானத்திற்கினங்க இருவரது பெயர் மத்திய குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஊடாக கட்சியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குறித்த பெயர்கள் இரண்டும் பின்னர் நீக்கப்பட்டு, ரெபுபாசம் மற்றும் பஜ்ரியா ஆகியோரது பெயர் வர்தமானியில் வெளியிடப்பட்டது. இது ஏறாவூர் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நாசகார வேலையை யாரோ பின்கதவால் செய்திருக்கக் கூடும் என ஆதரவாலர்கள் சந்தேகிக்கின்றனர்.

ஏறாவூர் நகர சபை தேர்தலில் றகுமானியா வட்டாரத்தில் போட்டியிட்ட ரெபுபாசம் அவ்வட்டாரத்தில் படு தோல்வியடைந்து, அவர் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் அவ்வட்டாரத்தில் பின்நிலைக்கு தள்ளப்பட்டார். குறிப்பாக அவ்வட்டார மக்களின் தெரிவின் அடிப்படையில் அவர் நிராகரிக்கப்பட்டார் என்பதுதான் உண்மையாகும்.

எது எவ்வாறாயினும், றகுமானியா வட்டாரத்தில் தோல்வியடைந்த ரெபுபாசம் தனது பெயரினையும், அதே வட்டாரத்தில் 2வது பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்ட பெண் ஒருவரது பெயரையும் இணைத்து ஏதோ ஒரு அடிப்படையில் ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு கிடைத்த விகிதாசார ஆசனத்தினூடான ஏறாவூர் நகர சபை உறுப்பினரானார்.

ஏறாவூர் நகர சபையின் முதல் அமர்வு தினத்தின் போது ரெபுபாசத்தின் வீட்டிக்கு வருகை தந்த ஜனாதிபதியின் இணைப்பாளர் டொக்டர் கொள்வின் ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு தவிசாளரை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அமைப்பாளர் சுபையிரின் பெயரை முன்மொழியுமாறு வழியுறுத்தினார். இதைனையும் பொருட்படுத்தாது ரெபுபாசம் முன்னாள் முதலமைச்சர் சார்பான அணியினருக்கு ஆதரவு தெரிவித்தமையினால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

ஏறாவூர் நகர சபையினுடைய தவிசாளர் பதவி ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு கிடைக்க வாய்ப்பிருந்தும், அக்கட்சி சார்பான உறுப்பினர்கள் கட்சியினுடைய தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டதனால் இறுதியில் அது கைநலுவிப் போனது. எனவே, எது எவ்வாறாயினும் கட்சியையும், கட்சியின் செயலாளரையும் அவமதித்த உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுதந்திரக்கட்சியின் ஏறாவூர் மத்திய குழு எதிர்பார்க்கின்றது.

ஏறாவூர் தவிசாளர் பதவிக்காக முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எஸ்.எம்.நளீம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஐ.ஏ.வாசித் அலி ஆகிய இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதனால் இருவரில் ஒருவரை தவிசாளராக தெரிவு செய்யும் பொருட்டு தெரிவுக்காக திறந்த வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

இதில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் வாசித் அலிக்கு ஆதரவாக 9வாக்குகளும், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் நளிமுக்கு 7வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதனடிப்படையில் 2மேலதிக வாக்கினால் வாசித் அலி தவிசாளராக தெரிவானார்.

LEAVE A REPLY