இடியப்பம் அவித்து 11 வருடங்கள் படிப்பித்த எனது மகனுக்கு O/L எழுத பாடசாலை அனுமதி அட்டை வழங்க வில்லை; அநியாயம் செய்து விட்டனர்: அழுது புலம்பும் ஒரு தாய்

0
990

-கல்வியமைச்சரே!
-மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி பணிப்பாளரே!
-காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளரே!

இது உங்களின் கவனத்திற்கு …

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சை பெறு பேறுகள் கடந்த 29.03.2018 அன்று வெளி வந்ததையடுத்து காத்தான்குடியிலுள்ள பிரபலமான ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்று 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சை எழுதுவதற்கு அனுமதி அட்டை வழங்காமல் ஒரு ஏழை மாணவனை ஏமாற்றிய சம்பவம் தொடர்பாக அந்த மாணவனின் தாய் தனது மகனுக்கு பாடசாலையினால் இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் நீதி கோரி நிற்கின்றார்.

குறித்த மாணவன் காத்தான்குடி 3ம் குறிச்சியைச் சேர்ந்த மாணவனாகும்.

இந்த மாணவன் ஆண்டு ஒன்றிலிருந்து 9ம் ஆண்டு வரை காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் கல்வி கற்று 10ம் ஆண்டிலிருந்து காத்தான்குடியிலுள்ள பிரபலமான பாடசாலையில் சேர்ந்து கல்வி கற்று வந்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்விப் பொதுத்தராதர சாதரண தரப் பரீட்சையை எழுதுவதற்காக அனுமதி அட்டையை குறித்த மாணவன் பாடசாலையிடம் கேட்டுச் சென்ற போது அந்த மாணவனுக்கு அனுமதி அட்டையை வழங்காமல் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் அலைத்திருக்கின்றார்கள்.

பாடசாலையின் 3ம் தவணைப்பரீட்சை எழுதவில்லை, அதனால் உமக்கு அனுமதி அட்டை வரவில்லை என அதிபர் மற்றும் அங்குள்ள சில ஆசியர்களினால் அந்த மாணவனுக்கு கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த மாணவன் தனது தாயையும் பாடசாலைக்கு அழைத்துச் சென்று பாடசாலை அதிபர் மற்றும் பரீட்சை அனுமதி அட்டைக்கு பொறுப்பான ஆசியரிடம் கேட்டுள்ளார்.

அப்போதும் அந்த அனுமதி அட்டை வழங்கப்பட வில்லை. 3ம் தவணைப்பரீட்சை எழுதவில்லை, அதனால் உமக்கு அனுமதி அட்டை வரவில்லை என்றே பதிலே வந்துள்ளது.

பாடசாலையில் 3ம் தவணைப் பரீட்சை நடைபெற்ற காலப்பகுதியில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த இந்த மாணவன், அப்போது பாடசாலைக்கு செல்லவில்லை. இதைக் கூறியும் கூட பாடசாலை நிர்வாக மாணவனின் பரீட்சைக்கான அனுமதியை அட்டை வழங்க வில்லை.

தனக்கு அனுமதி அட்டை வரவில்லை, இனி என்ன செய்யலாம் என்று வீடு திரும்பிய மாணவன் பொறுமையாக இந்த ஆண்டாவது பரீட்சையை எழுதுவோம் என நினைத்துக் கொண்டிருந்த போது அன்மையில் பரீட்சை பெறுபேறு வந்தது.

அப்போது குறித்த மாணவனின் பெயரை இணையத்தில் கண்ட சக மாணவன் ஒருவன் இந்த மாணவனிடம் விடயத்தைக் கூற அந்த மாணவன் தனது பெயரை பரீட்சை திணைக்களத்தின் இணையத்தில் தேடியுள்ளான்.

அப்போதுதான் தனக்கு பரீட்சைக்கான அனுமதி அட்டை வந்துள்ளது. அதனை பாடசாலை நிர்வாக தன்னிடம் தராமல் தன்னை ஏமாற்றியுள்ளனர் என தெரிய வந்தது.

அந்த மாணவனின் பரீட்சை பெறுபேற்றில் பாடங்களுக்கு சமூகமளிக்க வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நிர்வாகம் தன்னை பரீட்சை எழுத விடாமல் ஏமாற்றி தனது கல்வி வாழ்வை சீரழித்து விட்டனர் என்பதை தனது தாயிடம் கூற அந்த மாணவனும் தற்போது அந்த ஏழைத் தாயும் நீதி கோரி பல இடங்களுக்கும் சென்று வருகின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அந்த மாணவனின் தாய்,

நான் இடியப்பம் அவித்து அதனை வீடு வீடாக கொண்டு போய் விற்பணை செய்துதான் எனது அன்றாட ஜீவியத்தை கழிக்கின்றேன்.

எனது மகனை இடியப்பம் விற்பணை செய்தே 11 வருடங்கள் படிப்பித்தேன். ஆனால் எனது மகனுக்கு இப்படியொரு அநியாயத்தை பாடசாலை நிர்வாகம் செய்து விட்டது.

நான் மகனுடன் சென்று பரீட்சைக்கான அனுமதியை அட்டையை தருமாறு அதிபரிடம் கெஞ்சிக் கேட்டேன். ஆனால் அனுமதி அட்டை வரவில்லை எனக் கூறி மறுத்துவிட்டார்கள்.

நான் ஒரு ஏழை. என்னை பார்க்க கேட்க ஒருத்தருமில்லை என்பதற்காகவா இவ்வாறு இவர்கள் செய்தார்கள்.

மகனை படிப்பித்து என்ன செய்ய, கடைக்கு கூலி வேலைக்கு அனுப்புங்கள். இவர் படித்து என்ன சாதிக்கப் போகின்றார் என்றும் அந்த அதிபர் என்னிடம் கூறி என்னை ஒரு தரக்குறைவாகவே பேசினார்.

எங்கு வேண்டுமானாலும் போகட்டாம். எங்களை ஒன்றும் செய்ய முடியாது எனவும் கூறினார். இந்த அநியாயத்தை இந்த ஏழைக் குடும்பத்திற்கு ஏன் இவர்கள் செய்தார்கள்.

பரீட்சை நடைபெற்ற காலப்பகுதியில் வெட்கத்தினால் மகன் வெளியில் செல்ல வில்லை. பலரும் என்னிடம் கேட்கின்றனர் என அந்த தாய் அழுது கொண்டு கூறினார்.

-காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளரே!
-மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி பணிப்பாளரே!
-கல்வியமைச்சரே!

இது உங்களின் கவனத்திற்கு …

எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஊடகவியலாளர்
காத்தான்குடி

LEAVE A REPLY