ஓட்டமாவடி புதிய தவிசாளர் ஐ.ரி.அஸ்மியின் உரை

0
131

(வாழைச்சேனை நிருபர்)

தமிழ் கிராமங்கள் நகர பிரதேசங்களுக்கு சமமாக அப் பிரதேசங்களை முன்னுரிமை அடிப்படையில் கட்டியெழுப்ப வேண்டும் என ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டு தலைமையுரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக பொறுப்பேற்கும் இந்த சந்தர்ப்பத்தில் இதனை நிறைவேற்றித் தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கும், இப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற ஆலோசனையும் வழி காட்டலும் தந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சருமான றிஷாட் பதியுதீன், எமது கட்சியின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோருக்கும், கட்சியின் வெற்றிக்காக பிராத்தனைகளோடும் அர்ப்பணிப்புக்களோடும் உழைத்த பெரியோர்கள், நண்பர்கள், விசேடமாக தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இப் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாக்களித்த மக்களின் நல்ல நோக்கங்களை இப் பிரதேச சபைக்கு ஊடாகவும் சபையின் அதிகார எல்லைக்கு வெளியேயும் நிறைவேற்ற கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட என்னோடு இணைந்து பணியாற்றுமாறு அனைவரையும் முழு மனதோடு அழைப்பு விடுக்கின்றேன்.

இந்த பிரதேச சபையினால் இந்த பிரதேசத்திற்கு ஆற்றப்பட வேண்டிய பணிகள் மலை போல் குவிந்து இருக்கின்றன. ஆனால் அதனை பிரதேச சபையின் சொந்த வருமானத்தை மாத்திரம் கொண்டு நிறைவேற்ற முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.

கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவதன் மூலம் தேசிய அரசினதும், மாகாண அரசினதும் உதவிகளையும், சர்வதேச மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் அத்தோடு வெளிநாட்டு உதவிகளை பெற்றுக் கொள்வதன் மூலம் பிரதேச சபையின் இலக்குகளை அடைய நாம் அனைவரும் அர்ப்பணிப்போடும் உள சக்தியோடும், வெளிப்படைத் தன்மையோடும், கூட்டுப் பொறுப்போடும் மக்களுக்கு பொறுப்புக் கூற கடமைப்பட்டவர்கள் என்பதையும் நாம் நமது கொள்கையாகக் கொண்டு பணி புரிய வேண்டும் என்ற அவசியத்தினை பொறுப்புடன் இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

இப் பிரதேச சபையின் தவிசாளராக உங்களை வழி நடாத்த வேண்டிய பொறுப்பினையும் இப் பிரதேசத்தின் தலை மகன் என்ற அடிப்படையில் பிரதேச சபைக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும், இப் பிரதேச மக்களுக்கும், தலைமைத்துவம் வழங்க வேண்டியதன் பொறுப்பை உணர்ந்தவனாக எனது மனசாட்சிக்கும் பயந்தவனாக எனது கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவேன் என்பதனை இந்த சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக உறுதி மொழியளிக்கின்றேன்.

இப் பிரதேச சபையினால் ஆற்றப்பட வேண்டிய பணிகள் அனைத்தும் உறுப்பினர்கள், சமூகத்தில் உள்ள துறை சார் நிபுணர்களையும் கொண்ட ஆலோசனைக் குழுக்கள் மூலம் பிரதேச சபை சட்ட வரம்புக்கு உட்பட்டு தீர்மானிக்கப்படும்.

நான் சார்ந்த அரசியல் கட்சியின் தலைமைக்கும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருக்கும் விசுவாசமாக செயற்படுவதோடு, 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்திற்கும், நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், மாகாண சபைகள் சட்டத்திற்கும், நிதி நிர்வாக சட்டங்களுக்கும் அமைய இந்த சபையை வழி நடாத்த கட்சி பேதங்களுக்கு அப்பால் அரசாங்கத்தினதும் மாகாண சபையினதும் ஏனைய தரப்பினரதும் ஒத்துழைப்புக்களை தயவுடன் கோருகின்றேன்.

குறிப்பாக இப் பிரதேச சபையின் எல்லைக்குள் உள்ள பல தமிழ் கிராமங்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் அம்மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதை கண்கூடாக காண்கின்றோம். இச் சபை எல்லைக்குள் உள்ள நகர பிரதேசங்களுக்கு சமமாக அப் பிரதேசங்களை முன்னுரிமை அடிப்படையில் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

மிக முக்கியமாக இப்பிரதேச சபையின் இன்றைய நிதி நிலவரத்தை அனைவரும் அறிந்திருப்பதும் அது பகிரங்கப்படுத்தப்பட்ட விடயமாக இருப்பது நல்லாட்சி ஒன்றின் முதல் அடையாளமாகும். தற்போது மாதம் ஒன்றிக்கு ஏற்படுகின்ற மீண்டெலும் செலவினம் அண்ணளவாக 1.6 மில்லியன்களாகும். இத் தொகை இம் மாதத்தில் இருந்து 2 மில்லியன்களாக உயருவதை தவிர்க்க முடியாததாகும்.

இவ் வருடத்தின் மீதமுள்ள 10 மாதங்களுக்கான மீண்டெலும் செலவு 20 மில்லியன்களுக்கு குறையாததாகும். இப் பிரதேச சபையினால் மதிப்பிடப்பட்டுள்ள பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான சொந்த வருமானத்தில் இவ்வாண்டுக்குரிய சேகரிக்கப்படக் கூடிய தொகை எவ்வகையிலும் 7.0 மில்லியன்களை தாண்ட முடியாது. பிரதேச சபையின் மீண்டெலும் செலவினங்களை பிரதேச சபையின் சொந்த வருமானத்தின் மூலம் மாத்திரமே ஈடுகட்ட முடியும்.

இப் பிரதேச சபையின் மொத்த சொந்த வருமானங்களையும் மீண்டெலும் செலவினங்களுக்கே முழுமையாக செலவிட்டாலும் பற்றாக்குறையாக அல்லது துண்டு விழும் தொகை 11 மில்லியன்களாகும்.

இவ் வருடத்திற்கான பாதீட்டின் ஏனைய தலைப்புக்களில் உள்ள செலவுகளை செய்வதற்கு நிதியினை எங்கிருந்து எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது மற்றுமொரு பாரிய சவாலாகும். சபையின் நிதி நிலவரத்தை சீர் செய்வதற்கு அவசரமாகவும் அவசியமாகவும் செய்ய வேண்டிய நடவடிக்கைகளுக்கு சபையின் பிரதிநிதிகளும், உள்ளுராட்சி நிறுவனங்களும், உள்ளுராட்சி அமைச்சும், அரசியல் தலைமைகளும், அரசாங்கமும் இப் பிரதேச மக்களும் முழுமையான ஒத்துழைப்புக்களையும் பங்களிப்புக்களையும் உடனடியாக வழங்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இப் பிரதேச சபையை வழி நடாத்தவும் மீள் உருவாக்கம் செய்யவும் இப் பிரதேச மக்களின் பங்குபற்றுதலுடனான செயற்திட்டங்கள் இன்றியமையாததாகும். மக்களுக்காக நாம் என்ற கோட்பாட்டை எமது ஆட்சிக் கால பகுதியில் முழுமையாக கடைப்பிடித்து பணியாற்றுவோம் என்பதையும் உறுதியாகக் கூறிக் கொள்கின்றேன் என்றார்.

LEAVE A REPLY