ஆரையம்பதி பிரதேச சபையின் தவிசாளர் பதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது

0
383

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது. இந்த சபையின் தவிசாளராக சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் ஒரு மேலதிக வாக்கினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச சபையின் முதலாவது அமர்வு நேற்று (04) புதன்கிழமை கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது.

17 உறுப்பினர்களைக் கொண்ட மண்முனைப்பற்று பிரதேச சபையின் இந்த முதலாவது அமர்வில் 17 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது தவிசாளர் பதவிக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சோமசுந்தரம் மாணிக்கராசா மற்றும் சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் ஆகிய இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. தவிசாளர் தெரிவுக்காக ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த சோமசுந்தரம் மகேந்திரலிங்கத்துக்கு ஆதரவாக 8 வாக்குகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சோமசுந்தரம் மாணிக்கராசாவுக்கு 7 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இதனடிப்படையில் ஒரு மேலதிக வாக்கினால் சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இதன் போது தமிழ் விடுதலைக் கூட்டணி பெண் உறுப்பினர் ஒருவரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பெண் உறுப்பினர் ஒருவரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் நடு நிலையாக இருந்தனர்.

பிரதி தவிசாளர் தெரிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எம்.சுந்தரலிங்கம், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ரி.தயானந்தன் ஆகியோரின் பெயர்கள் முன் மொழியப்பட்டன.

இது திறந்த வாக்கெடுப்பாக நடாத்தப்பட்டது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலான எம்.சுந்தரலிங்கத்துக்கு ஆதரவாக 8 வாக்குகளும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலான ரி.தயானந்தனுக்கு 6 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதன் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலான எம்.சுந்தரலிங்கம் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

பிரதி தவிசாளர் தெரிவின் போது 3 உறுப்பினர்கள் நடு நிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

01 02 03

LEAVE A REPLY