நாட்டின் ஸ்திரத்தன்மையைக் கருத்திற் கொண்டு நல்லாட்சி அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறுவது பற்றிப் பரிசீலித்துக் கொண்டிருக்கின்றது

0
163

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்து

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

நாட்டின் ஸ்திரத்தன்மையைக் கருத்திற் கொண்டு நல்லாட்சி அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறுவது பற்றிப் பரிசீலித்துக் கொண்டிருப்பதாக என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபை, மற்றும் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபை ஆகியவற்றுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தெரிவான உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு ஏறாவூர் நகரசபை கேட்போர் கூடத்தில் நேற்று (02) திங்கட்கிழமை பகல் இடம்பெற்றது.

அங்கு சத்தியப்பிரமாண நிகழ்வு முடிந்ததன் பின்னர் உறுப்பினர்கள், கட்சி மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய ஹிஸ்புல்லாஹ், நாளை மறுநாள் பிரதமருக்கெதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை வருகிறது.

இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற உறுதியான தீர்மானம் இன்னும் எட்டப்படவில்லை.

ஆயினும், இரண்டரை வருட கால நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் பொருளாதாரம் அபிவிருத்தி அடையவில்லை, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தியை நாட்டு மக்கள் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

எனவே, மக்களின் குரலுக்கும் செவிசாய்க்க வேண்டிய தேவை உள்ளது.

அதேவேளை, இவ்வாறே அரசியல் ஸ்திரத் தன்மையற்ற சூழ்நிலையில் நாங்கள் இருந்து விடாமல் அடுத்த 18, 20 மாதங்களுக்கான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத ஒரு சூழ் நிலைக்கு நாம் களம் அமைத்துக் கொடுத்துவிடவும் முடியாது.

நாட்டின் பொருளாதாரமை; பாதுகாக்கக் கூடியதாக அரச இயந்திரம் இருக்க வேண்டும். நல்லாட்சி அரசில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறுவது பற்றிய அவசர அவசிய சந்திப்பு அடுத்த சில மணிநேரங்களுக்குள் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.

தேர்தல் காலங்களில் இனவாதப் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்த சூழ்நிலைகளைக் கடந்து தற்போது உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களாக தமிழ் முஸ்லிம் சிங்கள பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டிருகச்கின்றீர்கள்.

இதற்கு முன்னர் சாதாரண ஒரு பொதுமகனாக இருந்த நீங்கள் எல்லாம் தற்போது கௌரவ மக்கள் பிரதிநிதியாக வந்துள்ளீர்கள்.

ஆகவே, உங்களது நடை, உடை பாவனை, சிந்தனை செயற்பாடு எல்லாம் சிறந்ததாக முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

நேர்மையாக செயற்பட வேண்டும். இன மத பிரதேச மொழி வேறுபாடுகள் உங்கள் சிந்தனைகளில் எழக் கூடாது.

வார்த்தைப் பிரயோகங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிகரட் புகைப்பதையும் நிறுத்திக் கொண்டால் நல்லது. நீங்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பது ஜனாதிபதி தலைமையிலான கட்சி, அவருக்கும் இந்தக் கட்சிக்கும், உங்களைத் தெரிவு செய்த மக்களுக்கும் களங்கம் ஏற்பட்டு விடுமளவுக்கு உங்களது நடவடிக்கைகள் அமைந்து விடக் கூடாது.

செயற்பாடுகளில் மற்றவர்களை அனுசரித்துப் போக வேண்டும்.

உங்களது சிறந்த மக்கள் நலன் முதன்மைப் படுத்தப்பட்ட நடவடிக்கையால் எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிகமதிகம் மக்கள் ஆதரவைப் பெறும் வகையில் நீங்கள் செயற்பட வேண்டும்’ என்றார்.

LEAVE A REPLY