2004ல் காத்தான்குடி இரும்புத்தைக்கா பள்ளிவாயல் மீதான குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம்: விசாரணைக்கு நீதவான் உத்தரவு

0
382

(விஷேட நிருபர்)

2004ல் காத்தான்குடி இரும்புத்தைக்கா பள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நடாத்தப்பட்ட குண்டு வீச்சுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடாத்தி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா பொலிஸ் மா அதிபர் பொலிஸ் குற்ற புலனாய்வு திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த குண்டுத்தாக்குதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்ற காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி காந்தி ஓடாவியார் வீதியைச் சேர்ந்த முகம்மது சுல்தான் முகம்மது ஜௌபர் என்பவரினால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் 14 வருடங்களுக்கு பின்பு செய்யப்பட்ட நகர்வு மனு தொடர்பான விசாரணை வழக்கு கடந்த 28.3.2018 புதன்கிழமையன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவினை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

irumpu Thaikka 3கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி அன்றிரவு காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதான வீதியிலுள்ள இரும்புத்தைக்கா எனப்படும் மஸ்ஜிதுல் ஹசனாத் பள்ளிவாயலில் புனித ரமழான் மாதத்தின் விஷேட இரவு நேரத்தொழுகையான தறாவீஹ் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பள்ளிவாயலினுள் இந்த குண்டு வீச்சு தாக்குல் சம்பவம் இடம் பெற்றது. இதில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 12 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நடந்து முடிந்த காத்தான்குடி நகர சபை தேர்தல் பிரச்சாரக காலத்தின் போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார மேடையில் அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் இந்த குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனக்கு தெரிந்த விடயங்களை பற்றி பகிரங்கமாக பேசியிருந்தார்.

இந்த குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பில் காத்தான்குடியிலுள்ள பிரபல அரசியல் வாதி ஒருவரின் ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவரின் ஆதரவாளர்களினாலேயே இந்த பள்ளிவாயலில் குண்டு வீச்சு தாக்குதல் மேற் கொள்ளப்பட்டது என்பதை அந்த பிரச்சார மேடையில் குறித்த அரசியல் பிரமுகர் சுட்டிக்காட்டியிருந்தார்.

irumpu Thaikka 2இந்த பேச்சின் காணொளியை ஆதாரமாக கொண்டு இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த முகம்மது சுல்தான் முகம்மது ஜௌபர் என்பவரினால் சட்டத்தரணி பிறேம்நாத் என்பவரின் ஊடாக இந்த நகர்வு மனு 14 வருடங்களின் பின்னர் நீதிமன்றத்தில் சம்ர்ப்பிக்கப்பட்டு அந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த குண்டு வீச்சுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடாத்தி நீதிமன்றத்திற்கு எதிர் வரும் 24.4.2018 அன்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா பொலிஸ் மா அதிபருக்கும் பொலிஸ் குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கும் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இம் மாதம் 24.4.2018ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி காத்தான்குடியில் இஸ்லாமிய மார்க்க கொள்கை ரீதியான கலவரம் இடம் பெற்றது. இதன் போதே இந்த பள்ளிவாயல் மீதான குண்டு வீச்சுத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்றது.

இந்த குண்டு வீச்சு தாக்குதலில் அந்தக் காலப்பகுதியில் சில ஊடகங்களுக்கு பிராந்திய செய்தியாளராக கடமையாற்றிய மேற்படி ஜௌபர் உட்பட 12 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY